சரியான ஒழுங்குபடுத்தல் இன்றி கசினோ உரிமங்கள் வழங்கப்படக்கூடாது – ஹர்ஷ

265 0

இலங்கைக்குள் சூதாட்ட விடுதிகளை நடத்துவதற்கு உரிமம் வழங்கப்பட வேண்டுமானால், உடனடியாக சூதாட்ட ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் என கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை உரையாற்றிய அவர், உலகின் எந்த நாட்டிலும் கசினோ ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இல்லாமல் கசினோ உரிமங்கள் வழங்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டினார்.

மேலும், சம்பந்தப்பட்ட ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு எப்போது கொண்டு வரப்படும் என்பது குறித்து குறைந்தபட்சம் தோராயமாக கோப் குழுவிற்கு தெரியப்படுத்துவது அவசியம் என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் பயனுள்ளதாக மாற்றியதன் பின்னர் அனுமதியை பரிசீலிப்பதே சிறந்தது என கோப் குழுவின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு செலுத்தப்படும் வரியைத் தவிர, சூதாட்ட விடுதியை நடத்துவதற்கு எவ்வித ஏற்பாடும் இல்லை எனவும், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இந்த அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.