சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரும் போராட்டம் சீனா முழுவதும் பரவியது.
சீனாவில் கரோனா தொற்று ஓயவில்லை. அங்கு இப்போது கரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சீனாவின் பல பகுதிகளில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அமலில் உள்ளன. சுமார் 3 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளை சந்தித்துள்ள சீன மக்கள், ஆட்சியாளர்கள் மீது வெறுப்படைந்துள்ளனர்.
ஜின்ஜியாங் மாகாண தலைநகர் உரும்கி நகரில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் கடந்த வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் கரோனா கட்டுப்பாடு விதிகள் அமலில் இருந்ததால், அங்கிருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
இதையைடுத்து உரும்கி நகரில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த போராட்டம் சீனாவின் பல இடங்களுக்கு பரவுகிறது. ஷாங்காய் நகரில் நேற்று முன்தினம் இரவு மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இந்த கூட்டம் நேற்று காலையில் போராட்டமாக மாறியது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா முழுவதும் தளர்த்த வேண்டும் என மக்கள் கோஷம் எழுப்பினர். மற்றொரு இடத்தில் நடந்த போராட்டத்தில் சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும், அதிபர் ஜி ஜின்பிங்கும் பதவி விலக வேண்டும் என மக்கள் கோஷம் எழுப்பினர். இவர்களை கலைக்க போலீஸார் முயற்சி மேற்கொண்டனர்.
சீனாவில் ஆட்சியாளர்களுக்கு எதிரான பேராட்டம் மிகவும் அரிது. கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 100 நாட்களாக ஊரடங்கில் இருக்கும் மக்கள் தற்போது பொறுமை இழந்து, தெருவில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில், உரும்கி நகரில் பொது போக்குவரத்து இன்று முதல் படிப்படியாக தொடங்கும் என ஜின்ஜியாங் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறை பொறுப்பேற்ற ஒரு மாதத்தில், அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளது கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வெற்று காகித போராட்டம்
கடந்த 2020-ம் ஆண்டு ஹாங் காங்கில் போராட்டம் நடந்த போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட கோஷங்கள் மற்றும் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக மக்கள் வெள்ளை காகிதங்களை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் சீனாவில் தற்போது வெற்று காகித போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. சீன பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் வெள்ளை காகிதங்களுடன் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவுகிறது. நன்ஜிங் நகரில் உள்ள பல்கலைக்கழக மாணவி ஒருவர் வெள்ளை காகிதத்துடன் வாசலில் நிற்கிறார். அப்போது ஒருவர் அதை பறித்துச் செல்கிறார்.
இரவு நேரத்தில் போராட்டம் நடத்துபவர்கள் வெள்ளைத் தாளில் செல்போன் விளக்கை ஒளிரச் செய்கின்றனர். அப்போது பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ‘‘நீங்கள் செய்யும் செயலுக்கு ஒரு நாள் அனுபவிப்பீர்கள்’’ என திட்டுகிறார். பதிலுக்கு மக்களும், ‘‘அரசு செய்ததற்கு ஒரு நாள் அனுபவிக்க வேண்டும்’’ என கோஷமிட்டனர். இந்த போராட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன.