அமெரிக்கா வரை சென்று தாக்கும் வடகொரியாவின் ஹ்வாசாங்-17 ஏவுகணை: கிம் பெருமிதம்

112 0

உலகின் வலிமையான அணுசக்தி ஆற்றலை பெறுவதே தங்கள் நோக்கம் என்று வடகொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார்.

ஹ்வாசாங்-17 என்ற ஏவுகணை பரிசோதனையை வடகொரியா சமீபத்தில் வெற்றிகரமாக செய்து முடிந்தது. அந்நாட்டின் மிகப்பெரிய ஏவுகணை பரிசோதனையாக இது அறியப்படுகிறது. இந்நிலையில் இப்பரிசோதனையில் பங்கு கொண்ட அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும் சந்தித்து கிம் வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேசும்போது, “ஹ்வாசாங்-17 அமெரிக்கா வரை செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை. மிகவும் வலிமையான ஏவுகணை. இந்த ஏவுகணை பரிசோதனை வட கொரியாவின் உறுதியை நிரூபித்துள்ளது. உலகின் வலிமையான அணுசக்தி ஆற்றலை பெறுவதே எங்கள் நோக்கம்” என்றார்.

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், ஜப்பானின் வலியுறுத்தலின்படி வட கொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை ஆயத்தமாகி வருகிறது. இதனிடையே வட கொரியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க தென் கொரியாவும் தயாராகி வருகிறது. வடகொரியாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும், அந்நாடு தனது ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.