சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத் திறனாளிகளும் ரசிப்பதற்காக நிரந்தர நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது. சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது. சக்கர நாற்காலிகளை பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம். இந்த நிரந்தர நடைபாதை விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைபாதையை அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் உதய நிதி ஸ்டாலின் எம்ல்ஏ ஆகியோர் திறந்து வைத்தனர். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று மெரினா வந்த தங்கை வைஷ்ணவி கனவு நினைவாகிவிட்டது (Dream Come True) என்கிறார். ஆம் பலரின் கனவு மெய்ப்பட்டுள்ளது. சொன்னபடியே நிரந்தரமாக மாற்றுத் திறனாளிகளுக்கான பாதையை அமைத்துவிட்டோம். உங்களின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து நானும் மகிழ்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.