வியட்நாமில் இறந்த, யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்தவரது உடல் பாதுகாப்பான முறையில் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் வலியுறுத்தியுள்ளார்.
26 ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில், மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவன் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையினுடைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் இலங்கையில் வாழமுடியாது இலங்கையில் இருந்து கடல்வழி மார்க்கமாக 306 பேருடன் கனடாவிற்கு செல்வதற்கு முற்பட்ட கப்பல் வியட்நாமில் கரையொதுங்கி அங்கு ஒருவர் இறந்திருக்கின்றார்.
தங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் எனக்கூறி அவர் சனிட்டைசர் (தொற்றுநீக்கி) அருந்தி உயிரிழந்துள்ளார்.
அவருடைய மனைவியும் 4 பிள்ளைகளும், யாழ்ப்பாணம் – சாவகச்சேரியிலே எந்தவிதமான உதவிகளும் இல்லாது, இறந்த கணவருடைய உடலை எவ்வாறு கொண்டுவருவது என்று கூட தெரியாமல், அதற்குரிய நடைமுறைகளோ பொருளாதார வசதிகளோ இல்லாமல் அவர்கள் அந்தரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆகவே அந்த குடும்பத்தினர் குடும்பத் தலைவரை, அவனது இறுதி மரணச் சடங்கில் என்றாலும் பார்க்கின்ற வாய்ப்பு, உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஆகவே இறந்தவருடைய உடல் பாதுகாப்பான முறையில், துரிதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு அவரது குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதனை நாங்கள் கோரி நிற்கின்றோம் என்றார்.