வடக்கில் உள்ள அரச காணிகளில் இருக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுவதோடு, அவற்றை உரிய காலங்களில் விற்பனை செய்வதற்கான அனுமதியும் அளிக்கப்படும் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வட மாகாணத்தில் பசுமைத் திட்டத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு அரச காணிகளை பெற்ற குடும்பங்கள் மற்றும் பெறக் காத்திருக்கும் குடும்பங்களின் காணிகளிலே இவ்வாறு மரங்கள் நட்டி வைக்கப்படவுள்ளன.
வடக்கில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரச காணி வழங்கப்பட்டுள்ள நிலையில் காணியற்ற ஏனைய மக்களுக்கும் அரச காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
பசுமை மரத்திட்டத்தின் கீழ் வடக்கில் அரச காணிகளில் உள்ள ஒரு குடும்பத்துக்கு ஐந்து மரக்கன்றுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்கப்பட்டு, அவர்களின் காணிகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதுடன், அதனை பராமரிப்பதற்கான பயிற்சிகளும் ஆலோசனையும் வழங்கப்படும்.
அறுவடையின்போது குறித்த நபர்களின் பெயரில் பரிந்துரைக்கப்பட்ட மரங்களை உரிய விலையில் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதன் மூலம் நிரந்தர வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஆகவே, மக்களுக்கான பசுமை மர நடுகைத் திட்டத்தை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேசமட்ட குழுக்களுடன் இணைந்து விரைவில் செயற்பட எண்ணியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.