முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் போலீசார் மற்றும், இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.
சரியாக மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
அந்தவகையில் பிரதான சுடரினை மூன்று மாவீரர்களது சகோதரியான உடுப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த மொறிஸ் வேணன் அக்கினேஸ் என்பவர் ஏற்றினைார்.
மேலும் குறிப்பாக முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள நிலையில், மீள் குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து மாவீரர் துயிலுமில்ல வளாகத்திற்கு முன்பாக வீதியோரமாகவே உறவுகளால் மாவீரர்களுக்கு அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இந் நிலையில் இராணுவத்தினரின் பலத்த கண்காணிப்பிற்கு மத்தியில் ஒருவித அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே உறவுகளால் அஞ்சலி செலுத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.
அத்தோடு 26.12.2022 சனிக்கிழமையன்று அளம்பில் துயிலுமில்ல வளாகத்தில் நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகளில் மாவீரர்களது உறவுகள் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் பொலிசாரால் அச்சுறுத்தப்பட்டதுடன், துயிலுமில்லவளாகத்தின் பிரதான நுழைவாயில் வளைவினை அகற்றுமாறும் அச்சுறுத்தியிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாவீரர்களது உறவுகள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.