இந்தியாவின் ரோவின் தலைவர் சமந் குமார் கோல் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவையும் சந்தித்துள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது
இந்தியாவின் உயர் அதிகாரியொருவர் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு முகவர் அமைப்பான ரோவின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆலோசகர் சாகல ரட்நாயக்கவும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொடவும் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர் அதிகாரி முன்னாள் நிதியமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சிந்தாந்தவாதியும் கொள்கை வகுப்பாளருமான பசில் ராஜபக்சவையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
இருப்பை இழந்த நிலையில் உள்ள பசில் ராஜபக்சவை சந்திக்க ஏன் அவர் தீர்மானித்தார் என்பது தெளிவாக வில்லை .ஆனால் இந்தியா ஆளும் கட்சியை சேர்ந்த இருவருடன் மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்ற செய்தியா இது?
இதனடிப்படையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரையும் அரசாங்கத்தின் முக்கிய கட்சி ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன என்ற அடிப்படையிலும் இந்த சந்திப்பு இடம்பெற்றதா என்பது தெரியவில்லை.
பசில் ராஜபக்ச வெளிநாட்டில் இருக்கும்போது எந்த தொடபுர்களிலும் ஈடுபடவில்லை அவர் ஞாயிற்றுக்கிழமை இலங்கை திரும்பினார் திங்கட்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் முக்கிய பிரமுகர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்கள முழுமையாக வெளியாகவில்லை எனினும் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளின் போது ரோ தலைவர் பல பாதுகாப்பு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டாh என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரோவின் தலைவர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து மாத்திரமின்றி பொருளாதார நிலைமை குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் குறித்து ரோவின் தலைவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அரசாங்கம் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எதனையும் செய்யாது என உறுதியளித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் விபரங்களை ரோவின் தலைவர் இந்திய பிரதமரிடமும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடமும் தெரிவிப்பார்.