உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப கட்டச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னதாக நடத்துவதை இலக்காகக் கொண்டு ஆரம்பகட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
குறிப்பாக, வாக்காளர் பட்டியல்களை இறுதி செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனைவிடவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான திட்டங்களை தயாரிக்கும் போது புதிய குழுக்களின் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்த ஆலோசனைகளை சட்டமா அதிபரிடமிருந்தும் பெறப்படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
இதேவேளை, மஹிந்த தேசப்பிரிய தலைமையில் எல்லை நிர்ணயத்தினை மேற்கொள்வதற்கான நியமிக்கப்பட்ட தேசியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்குள் வழங்கப்பட வேண்டியுள்ளது.
21ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டள்ள நிலையில், ஆணைக்குழுக்களுக்கு மீண்டும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டியுள்ளது.
இந்த விடயங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்ட மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தலை நடத்துவதில் தாக்கத்தினைச் செலுத்துமா என்பது குறித்தே தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரிடத்தில் ஆலோசனையைப் பெறுவதற்கு நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.