இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டு முக்கிய சந்திப்புகளை நடத்தியதாகவும், இந்த விஜயமானது மிகவும் இரகசியமாக (Secret Visit) முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமோ அல்லது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவோ பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின் விஜயம் குறித்து எவ்விதமான உத்தியோகபூர்வ அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.
மேலும், சில முக்கிய அரச தகவல் மூலங்கள், குறித்த விஜயம் தொடர்பில் கருத்து கூற விரும்பவில்லையே தவிர மறுக்கவில்லை.
மறுபுறம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு டெல்லியின் முக்கிய செய்தியொன்றினை கொழும்புக்கு கூறிவிட்டுச் சென்றதாக இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
எவ்வாறாயினும், இந்த விஜயத்தின் உண்மை நிலை இன்றும் இரகசியமாகவே உள்ளது. அவ்வாறிருக்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்று நான்கு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவோ இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்போ இடம்பெறவில்லை.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையிலான இருதரப்பு கலந்துரையாடலுக்காக இலங்கை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஊடாகவும் இந்த இருதரப்பு சந்திப்புக்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்னும் அதற்கான சாத்தியப்பாடுகள் ஏற்படவில்லை.
அதேபோன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாகவும் அரச தரப்பு முயற்சித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க இரு வாரங்களுக்கு முன்பு டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டு, முக்கிய சந்திப்புகளில் கலந்துகொண்டு, இரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட போதிலும், டெல்லியில் இருந்து உறுதியான அறிவிப்புகள், பதில்கள் கிடைக்கப்பெறவில்லை.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார பெரும் நெருக்கடியின் பின்னர் இலங்கைக்கு இந்தியா பல உதவித்திட்டங்களை முன்னெடுத்திருந்தது.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தார். குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்க முழு அளவில் இந்தியா உதவிகளை செய்தது.
மேலும், உணவு, மருந்து மற்றும் உரம் என ஏனைய சமூக பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பல உதவித்திட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் சர்வதேச அரங்கிலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அழைப்பு விடுத்தது.
நெருக்கடியின்போது மாத்திரம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியிருந்தது.
ஆனால், அண்மைக்காலமாக கொழும்புக்கும் டெல்லிக்கும் இடையிலான உறவு குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
சீன உளவுக்கப்பலான யுவாங் வான் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்ததன் பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு இராஜதந்திர தகவல்கள் கூறுகின்றன.
அது மாத்திரமல்ல, இலங்கை மக்களின் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க ஒத்துழைப்பு வழங்கிய போதிலும், சீன கப்பல்களுக்கு அவற்றை வழங்குவதாக டெல்லி முதன் முதலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிர்வாகத்தின் மீது அதிருப்தியை வெளியிட்டது.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு இணக்கப்பாடுகளுடனான 15க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான திட்டங்கள் இலங்கை தீவில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் டெல்லி கவலை தெரிவித்துள்ளது.
அதேபோன்று சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் கொழும்பின் அறிவிப்புகளால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
நல்லாட்சியில் ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனவிடம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து சீனா தரப்பு அப்போது பேசுகையில் நேரடியாகவே அதனை மறுத்திருந்தார்.
ஆனால், தற்போது அதனை ஊக்குவிக்கும் வகையில் கொழும்பின் நகர்வுகள் அமைவதாக டெல்லி கடும் அதிருப்தியை பல மட்டங்களில் வெளியிட்டுள்ளது. இந்த அதிருப்திகளின் வெளிப்பாடாகவே பிரதமர் மோடியுடனான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வின் சந்திப்பு பிற்போடப்பட்டு வருவதாக கொழும்பு இராஜதந்திர தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வாறானதொரு நிலைமையிலேயே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கொழும்புக்கு வருகை தந்திருந்தமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.