140 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட பறவை இனம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

115 0

140 ஆண்டுகளாக அழிந்துவிட்டது என கருதப்பட்ட பறவை இனம் ஒன்று பப்புவா நியூ கினியா தீவுகளில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.

உடலின் மையப் பகுதியில் ஆரஞ்சு நிறம் கொண்ட புறா இனம் (black-naped pheasant pigeon) ஒன்றினை 1882-ஆம் ஆண்டுக்குப் பிறகு காடுகளில் காண முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அந்த இனத்தின் பறவை ஒன்று 140 ஆண்டுகளுக்குப் பிறகு பப்புவா கினியா தீவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொலைந்த பறவைகளைக் கண்டுபிடிப்பதற்கு ‘லாஸ்ட் பேர்ட்ஸ்’ என்ற அமைப்பு, விஞ்ஞானிகளுக்கு உதவி வருகிறது. இந்த அமைப்பின் உதவியுடன்தான் விஞ்ஞானிகள் இப்பறவை இனத்தை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானி டோகா நாசன் கூறும்போது, “இதுவே மகிழ்ச்சியான தருணம். என் கால்கள் நடுங்குகின்றன” என்று சிலிர்ப்புடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

லாஸ்ட் பேர்ட்ஸ் அமைப்பின் ஜான் பேசும்போது, “இப்பறவையை கண்டுபிடிப்பதற்காக பல இடங்களில் கேமரா வைக்கப்பட்டது. பல தேடல்களுக்குப் பிறகு பெர்குசன் தீவு பகுதியில் செப்டம்பர் மாதம் இந்தப் பறவையின் புகைப்படம் எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

பெர்குசன் தீவுப் பகுதியில் 2019-ஆம் ஆண்டே இந்தப் பறவை இனம் கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகளுக்கு தகவல் கிடைத்தது. எனினும், பறவையை விஞ்ஞானிகளால் காண முடியவில்லை. இந்த நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பறவை இனம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் அழிந்துபோன பிற பறவை இனங்களான கிறிஸ்டினா பிக்ஸ் போன்ற பறவைகளையும் கண்டறியலாம் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு பிறந்துள்ளது.