சென்னை மாநகர பேருந்துகளில் அடுத்து வரும் நிறுத்தம் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அடுத்து வரும் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அடுத்த நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டர் முன்பாக, தமிழ், ஆங்கிலத்தில் அறிவிப்பை வெளியிட பேருந்துகளில் உரிய வசதிகள் செய்யப்பட்டன.
இதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனையில் நேற்று நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், அவர்கள் அனைவரும் பேருந்தில் ஏறி, பாரிமுனை, தலைமைச் செயலகம், மெரினா கடற்கரைசாலை வழியாக சென்று, விவேகானந்தர் இல்லம் நிறுத்தத்தில் இறங்கினர்.
அமைச்சர் பதவி: பிறகு, செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியபோது, ‘‘மக்களுக்கு பயன்படும் வகையில் நல்லதொரு முன்னெடுப்பை போக்குவரத்து துறை தொடங்கியுள்ளது. இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது. எனக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்’’ என்றார்.
இந்த புதிய வசதி குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம், நிறுத்தம் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு, ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. இதனால், பயணிகள் இறங்க வேண்டிய நிறுத்தத்தை முன்கூட்டியே அறிந்துகொண்டு சிரமமின்றி, தாமதமின்றி இறங்க முடியும்.
தவிர, பார்வைத் திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு இந்த தானியங்கி ஒலி அறிவிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதல்கட்டமாக 150 பேருந்துகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 1,000 பேருந்துகளில் செயல்படுத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.