புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாக இருந்தாலோ இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக இருந்தாலோ தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதோடு, அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளீர்க்கப்பட்டுள்ள விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை மையப்படுத்தி பிரதான மூன்று விடயங்களை உடன் அமுலாக்குமாறு அரசாங்கத்தினைக் கோருவதென தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு, மக்கள் தொடர்பிலான பிரச்சினைகளை, அந்த மக்களின் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்கு தயார் என்று விடுத்த அறிவிப்பினை அடுத்து, வடக்கு, கிழக்கினைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் கட்சிகள் வெள்ளிக்கிழமை (25) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் கூடியிருந்தன.
இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா, புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றதுடன், கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய, தமிழ் மக்கள் கூட்டணின் தலைவர் விக்னேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும், சுமந்திரன், சிறீதரன் கோவிந்தன் கருணாகரம், வினோநோதராதலிங்கம், ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில், கூட்டத்தின் ஆரம்பத்தில் சம்பந்தன், தனது அழைப்பினை ஏற்று வருகை தந்தவர்களை வரவேற்றதோடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பு குறித்த கருத்துக்களை வெளியிட்டார்.
அதன்போது, விக்னேஸ்வரன், ஒற்றையாட்சி அரசியலமைப்பை அடிப்படையாக வைத்து பேச்சுக்களை முன்னெடுக்க முடியாது என்று குறிப்பிட்டதோடு தனது நிலைப்பாடுகளையும் தெளிவு படுத்தியுள்ளார். அத்துடன், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக எழுத்துமூலமான அறிவிப்பொன்றை ஜனாதிபதிக்கு விடுத்து அவருன் இணக்கப்பாடொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தொனிப்படவும் கருத்துக்களை முன்வைத்தார்.
அதனையடுத்து, சுரேஷ்பிரேமச்சந்திரன், கடந்த ஏழுபத்தைந்து வருடங்களுக்கு மேலாக இவ்வாறு ஒப்பந்தங்களையும், இணக்கப்பாடுகளையும் மேற்கொண்டு பேச்சுக்களை முன்னெடுத்தபோதும் அதனால் எவ்விதமான பயன்களும் ஏற்படவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு வெறுமனே சென்று பேச்சுவார்த்தையில் அமரமுடியாது.
ஆகவே, பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முன்னதாக, தமிழ் மகக்கள் அன்றாடம் முகங்கொடுக்கும் முக்கிய விடயங்கள் மற்றும் அரசியலமைப்பில் காணப்படும் விடயங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்திக் காண்பிக்க வேண்டுமென அரசாங்கத்திடம் பகிரங்கமாக் கோருவோம் என்ற யோசனையையை முன்வைத்திருந்தார்.
அதுமட்டுமன்றி, அந்த விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி நல்லெண்ண சமிக்ஞையொன்றை காண்பிக்க வேண்டும். அல்லது அவை ஆரம்பிக்கப்பட்டு பேச்சுவர்த்தைகளும் முன்னெடுக்கப்படுகின்றபோது சமாந்தரமாக செல்ல வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளர்.
இந்த முன்மொழிவினை ஏனைய தலைவர்களான, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். இதனிடையே, சிறிதரன் எம்.பி, அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு செல்வதாக இருந்தால் ‘மூன்றாம்’ தரப்பு மத்தியஸ்தம் ஒன்றைக் கோருவது சிறந்த நகர்வாக இருக்கும் என்று தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அவ்வாறு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தினை அழைக்கின்றபோது, இலங்கை அரசாங்கம் ஏமாற்றுவதற்கான சூழல்கள் குறைவாகவே இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில், சுமந்திரன் எம்.பி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதற்காக தற்போது தமிழ்த் தரப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்கு முனைகின்றார் என்பதற்கான பின்னணி பற்றிய தெளிவு படுத்தலைச் செய்தார். ஏற்கனவே, கோட்டாபய ராஜபக்ஷ, கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகி வந்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த ரணில் விக்கிரமசிங்கவும், தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் கரிசனை கொண்டிருந்தார்.
அவரது கரிசனை அதன்பின்னர் பிரதமரான போதும் வெளிப்படுத்தப்பட்டு ஜனாதிபதியாகின தருணத்திலும் பகிரங்கமாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச நிலைமைகளும் அவ்விதமானதொரு நடவடிக்கைளை எடுப்பதற்கு உந்தியுள்ளன, என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெரும்பாலும் 2023ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் மீதான விவாதங்கள் நிறைவு பெற்ற நிலையிலேயே பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது என்று அங்கிருந்த உறுப்பினாகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே, அவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படுமாக இருந்தால், தமிழ்த் தரப்பு இணைந்து பொதுவான விடயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது அதனடிப்படையில, கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு முக்கியமான மூன்று விடயங்களை முன்வைக்க வேண்டும் என்ற விடயத்தில் ஐந்து கட்சிகளின் தலைவர்களும், பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டனர்.
அதனடிப்படையில்,
நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்
அதிகார பகிர்வு சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை அமுல்படுத்தி மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட்ட வேண்டும்
உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த வடகிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான புது அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த ஒழுங்குமுறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதை நாம் வரவேற்கிறோம்
ஆகிய மூன்று விடயங்கள் முதற்கட்டமாக முன்வைப்பதென கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு மத்தியில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேநேரம், மீண்டும் இந்த விடயங்கள் தொடர்பில் கூடிப்பேச்சுக்களை முன்னெடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்ட போதும் அதற்கான திகதியிடப்படவில்லை. அத்துடன், அடுத்த கூட்டத்திற்கு முன்னதாக கஜேந்திரகுமாருடன் மாவை.சோ.சேனாதிராஜா பேச்சுவார்த்தை முன்னெடுப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.ராம்