ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி நீதிமன்ற சேவைகளில் தலையீடு செய்துள்ளார். இதனால் நீதிமன்ற சேவையின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இதற்காக அவர் மக்களிடத்தில் மன்னிப்பு கோர வேண்டும்.
கடந்த மாதம் ஜனாதிபதி மட்டக்களப்பில் சேவையாற்றி வந்த இராமநாதன் கண்ணண் என்ற சட்டத்தரணியை பிரதம நீதியரசராக நியமித்து முழு சட்டத்துறையினையும் ஆட்டங்காணச் செய்தார்.
இராமநாதன் கண்ணன் என்பவர், 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் உயர் நீதியரசர்களுக்கான தேர்வுகளில் சித்தியடையவில்லை. அந்த பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் தற்போதும் நீதிவான்களாக சேவையாற்றுகின்றனர்.
இந்த நிலையினை உணர்ந்து, “இந்த தவறை ஒருபோதும் செய்யப்போவதில்லை” என்று நாட்டு மக்களிடத்தில் மன்னிப்பு கோர வேண்டும்.
இல்லாவிட்டால், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கையான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.