மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஹட்டன் – டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதிமார் ஒன்றிணைந்து கறுப்புக் கொடியணிந்து அமைதி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இலவச சுகாதார சேவை மற்றும் இலவசக் கல்வியை பாதுகாக்கக் கோரியும் சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியை அரசுடமையாக்கக் கோரியும் இன்று (செவ்வாய்க்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
டிக்கோயா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிலிருந்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வைத்தியசாலை சந்தியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது டிக்கோயா பொது வைத்தியசாலைக்கு முன்பாக கறுப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் வழங்கப்படும் பட்டத்தை இலங்கை மருத்துவ சபை அங்கீகரிக்க வேண்டுமென அண்மையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இதற்கெதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.