இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு சீனா தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கியூ சென் ஹொங் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே சீனா தூதுவரால் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் முற்போக்கான இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதே வேளை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் , சீனா குறித்து வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ள போலி செய்திகள் தொடர்பிலும் சீன தூதுவர் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள போதிலும் , இதனை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்காக கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரதான கடன் வழங்குனர்களான இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவுடன் இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இந்தியா மற்றும் ஜப்பான் என்பன இவ்விடயத்தில் சாதகமான பதிலை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ள போதிலும் , சீனா ஸ்திரமாக எதனையும் அறிவிக்கவில்லை. மாறாக நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவே குறிப்பிட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதிக்கும் சீனத் தூதுவருக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.