கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறு சந்திரிகா வேண்டுகோள்

118 0

பொருளாதார பாதிப்புகள் தீவிரமடையும் போது மக்களின் போராட்டங்களும் தீவிரமடையும். மேலும் போராட்டங்கள் வலுப்பெறும் போது நாட்டில் நெருக்கடிகள் தலைத்தூக்கும்.

நெருக்கடிகளை தீர்ப்பது நாட்டு தலைவர்களுடைய பொறுப்பாகும். எனவே நாட்டை நெருக்கடியிலிருந்து மீள கட்டியெழுப்ப ஊழல் மற்றும் மோசடிகளை நிறுத்தி விட்டு அனைவரும்  கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

பெபரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை பெண்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்றம், மாகாண மற்றும் பிரதேச சபைகள் மற்றும் அரச திணைக்களங்களில் பெண்களின் விகிதாசாரத்தை அதிகரிப்பதாக பல்வேறு அரசாங்கங்கள் நீண்ட காலமாக கூறி வந்த  போதிலும் அதனை எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  நடைமுறைப் படுத்த முடியவில்லை.

நாட்டின் சனத்தொகையின் 51 வீதமான பெண்களில் வெறும் 25 வீதமானவர்கள் மாத்திரமே அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக அந்த எண்ணிக்கைகளும் பிரதேச சபைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனக்கு இதைக் கூறுவதற்கு வெட்கமாக இருக்கிறது.

இருப்பினும் பெண்கள் ஆசிய நாடுகளில் வீட்டின் சமயலறையுடன் அவர்களின் தலைமைத்துவம் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சமூகத்திற்குள் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அதற்கான வேலைத்திட்டங்களும் இல்லை.

நாட்டில் பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. கொலை, கொள்ளை சம்பவங்களும் குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களும் அதிகரித்துள்ளன.

சிறுவர்களுக்கு போசாக்கான உணவின்றி 20 வீதமானவர்கள் மந்தபோசணையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வேளை உணவு அரச தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒருவேளை உணவாக மாற்றப்பட்டு இருக்கிறது.இவ்வாறான பொருளாதார பாதிப்புகள் தீவிரமடையும் போது போராட்டங்கள் தீவிரமடையும்.

தற்போது சிலர் அடிப்படை கல்வி, அடிப்படை தகைமைகள் மற்றும் அனுபவங்கள் இன்றி பாராளுமன்ற ஆசனத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் தமது சட்டையின் உள்ள பொக்கட்டுக்களை நிரப்புவதில் ஆர்வமாக செயற்படுகிறார்கள். இவ்வாறான தரப்பினரால் தான் நாடு இன்று வங்குரோத்து அடைந்துள்ளது.

அரசியல் என்பது எங்களால் உருவாக்கப்படுவதில்லை. நாட்டினால் உருவாக்கப்படும் ஒன்றாகும். மேலும் நாட்டை மீட்க கூடிய தரப்பினருக்கு நாம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். அவர் இவரை சாடுகிறார். இவர் அவரை சாடுகிறார்.ஆனால் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் எவரும் கூறவில்லை.

பொருளாதார நெருக்கடிகளால் சரிந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஊழல் மற்றும் மோசடிகளை நிறுத்தி விட்டு அரசியல் கட்சி பேதமின்றி செயற்படும் போது நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல முடியும்.

இன, மத மொழி கலாச்சார வேறுபாடுகள் காரணமாக நாடு பிளவுப்பட்டு காணப்படுகிறது. இதனை முதலில் இல்லாது செய்ய வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும்  மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.