தேர்தல் தொடர்பாக சில விடயங்களை ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது. இந்த விடயத்தை மையப்படுத்தி பல தீர்மானங்களை கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் குறித்த முன்மொழிவுகளையும் தீர்மானங்களையும் காலம் தாழ்த்தாமல் அதனை அறிவித்து தேர்தலை குறித்த காலப்பகுதிக்குள் நடத்த வேண்டும்.
இருப்பினும் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் சாதகமான மாற்றம் மற்றும் பெண்களுக்களின் அரசியலை மேம்படுத்தும் நோக்கில் பெண்களில் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பெப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை சான்றிதழ் வழங்கும் விழா பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (24) இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் பெண்களின் எண்ணிக்கையை குறைக்கமால் இருக்கவேண்டும். இருப்பினும் அவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமாயின் அதனை நாம் வரவேற்கிறோம்.
இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் போது அதில் இளைஞர், யுவதிகள் அதிகளவில் அரசியலில் பங்குபெற செய்ய முடியும். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை குறித்த காலப்பகுதியில் நடத்த வேண்டும். அதன் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டும்.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட 21 கட்சிகள் இணைந்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்றோம். கூட்டாக எமது ஆலோசனைகள் கூறியுள்ளோம்.
தேர்தல் ஆணைக்குழு தலைவரும் தேர்தலை பிற்போடுவதற்கு எந்தவொரு திட்டங்கள் அல்லது தீர்மானங்கள் இல்லை என்றார்.
இருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை பிற்போடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க மாட்டோம். அவ்வாறானதொரு சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்குமாயின் நீதிமன்றத்தை நாடுவோம்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் பொதுக்கொள்கைகளை உள்ளடக்கிய புதிய திட்டங்களை முன்வைக்கவுள்ளது. நாட்டு மக்கள் எமது கட்சியோடு இணைந்து எமக்கான பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.