எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக்கட்டணம் திட்டமிட்ட வியாபாரமா? – முஜிபுர் ரஹ்மான் கேள்வி

88 0

ஊழல் மோசடிகளுக்கு எதிராக நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு கடந்த காலத்தில் படிப்பினை வழங்கினாலும் அரசாங்கம் இன்னும் திருந்தவில்லை. அதனால்தான் பசில் ராஜபக்ஷ்வை வரவேற்பதற்கு விமான நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த தேநீர் உபசரிப்புக்கான செலவை சிவில் விமான சேவை திணைக்களம் வழங்கி இருக்கின்றது. அத்துடன் ஊழலை ஒழிப்பதற்கு  ஜனாதிபதியும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (25) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிராக மக்கள் வீதிக்கிறங்கி போராட்டம் மேற்கொண்டனர். அதன் விளைவாக அரசியல் மாற்றம் ஏற்பட்டது. என்றாலும் இன்னும் இந்த அரசாங்கத்தில் இருப்பவர்கள் மக்களிடம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் கடந்த வாரம் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டில் இருந்து வரும்போது அவரை வரவேற்பதற்கு அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் உட்பட பல சென்றிருந்தனர். அங்கு சென்றவர்களுக்காக தேநீர் உபசரிப்பு ஒன்றும் இடம்பெற்றது.

ஆனால் தேநீர் உபசரிப்புக்கான கட்டணமாக 65ஆயிரம் ரூபா செலவை சிவில் விமான சேவை திணைக்களமே செலுத்தி இருப்பதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிட்டிருக்கின்றது. அதனால் மோசடிகள் தொடர்பில் இவர்கள் இன்னும் திருந்தவில்லை.

அத்துடன் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து பல்வேறு விடயங்களை குறிப்பிடுகிறார். ஆனால் ஊழல் மோசடிகளை ஒழிப்பது தொடர்பாக எதுவும் தெரிவிப்பதில்லை. ஜனாதிபதி ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு எந்த   நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதனால்தான் பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவுசெய்துகொண்டார்கள்.

மேலும் எரிபொருள் கப்பல்களுக்கு தாமதக்கட்டணம் செலுத்தும் நடவடிக்கையை காண்கின்றோம்.இவ்வாறு தாமதக்கட்டணம் செலுத்துவதால், அதனுடன் தொடர்புபட்டவர்களுக்கு நூற்றுக்கு 40,50 வீதம் பிரிந்துசெல்வதாக இந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர் ஒருவர் ஊடகங்களில் பாரிய குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்திருந்தார்.

இறுதியாக நாட்டுக்கு வந்த எரிபொருள் கப்பல் 65நாட்கள் கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதற்காக தாமதக்கட்டணமாக 82இலட்சத்தி 50ஆயிரம் டொலர் மில்லியன்  செலுத்தி இருக்கின்றது.

எரிபொருள் கொள்வனவு செய்ய டொலர் இல்லாமல், எரிபொருள் கப்பலுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. கப்பல் துறைமுகத்துக்கு வந்த பின்னரே அதற்கு தேவையான டொலரை தேடுகின்றனர். அதனால்தான் தாமதக்கட்டணம் செலுத்தவேண்டி ஏற்படுகின்றது.

எரிபொருளுக்கு டொலர் இல்லை என்றால், அதனை திறைசேரியிடம் கோரி டொலர்களை தேடிக்கொள்ள நடவடிக்கை எடுக்காமல் எவ்வாறு எரிபொருள் கப்பலை கொண்டுவர முடியும். அதனால் இது திட்டமிட்ட வியாபாரமா என்ற சந்தேகம் எழுகின்றது என்றார்.