ஆதார் இணைப்பு அறிவிப்பால் மின்கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் தவிப்பு

116 0

நுகர்வோரின் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மின்நுகர்வோர் பலரும் மின்வாரிய இணையதளத்துக்கு சென்று, தங்கள் மின்இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், மின்வாரிய இணையதளத்தின் சர்வர் முடங்கியது. இதன் காரணமாக ஆதார் எண்ணை இணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன், மின்கட்டணத்தையும் கட்ட முடியாததால், பலரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதுதொடர்பாக நுகர்வோர் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, நவ.24 முதல் 30-ம் தேதிக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் மின்கட்டணம் செலுத்த 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மின்வாரியம் அறிவித்துள்ளது.

எனினும், ஏராளமானோர் தங்கள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இணையதளம் மூலமாகவும், மின்வாரிய அலுவலக கவுன்ட்டர்களிலும் நேற்று குவிந்தனர். இதனால், மின்வாரியத்தின் இணையதள சேவை முடங்கியது.

இதுகுறித்து மின்நுகர்வோர் சிலர் கூறியபோது, ‘‘மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஆன்லைனில் கடந்த 4 நாட்களாக முயன்றும், இணைக்க முடியவில்லை. நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அலுவலகத்துக்கு வந்தால், இணையதள சர்வர் டவுன் ஆகிவிட்டது என்று கூறி, சிறிது நேரம் கழித்து வருமாறு திருப்பி அனுப்பி அலைக்கழிக்கின்றனர். தவிர, இணைப்பு பணிக்கு சராசரியாக ஒரு நபருக்கு குறைந்தபட்சம் அரை மணி முதல் முக்கால் மணி வரை ஆகிறது. இதனால், மணிக்கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது. தவிர, அவசர அவசரமாக ஆதார் எண்ணை இணைப்பதால் நுகர்வோருக்கு பல்வேறு சந்தேகம் எழுகிறது. ஆதார் எண்ணை இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் வரையிலான மானியம் ரத்தாகுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, இதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றனர்.