ஹோமியோபதி மருத்துவத்தில் நீண்ட அனுபவம் பெற்றவரும், மருத்துவத் துறையில் உயர்ந்த பட்டம் பெற்றவருமான மருத்துவர் எஸ்.முகம்மது அலீம் எழுதிய ‘மருத்துவத்தில் மாற்றுக் கருத்துகள்’ என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தை வெளியிட்ட கவிக்கோ பதிப்பகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவர் முகம்மது அலீம் தனது அனுபவங்களையும், அறிவையும் வைத்து ‘மருத்துவத்தில் மாற்றுக் கருத்துகள்’ நூலை எழுதியுள்ளார். நூல் வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்று வந்த சூழலில் துரதிருஷ்டவசமாக அவர் இயற்கை எய்தினார். எனினும் அவரது குடும்பத்தினர் கடந்த 20.11.22 அன்று நூலை வெளியிட்டனர்.
தற்போதைய சமூகச் சூழலில் மருத்துவம் எப்படியெல்லாம் வணிகமயமாக்கப்பட்டுவிட்டது என்ற யதார்த்தத்தை ஆசிரியர் வெளிப்படையாகவே நூலில் விளக்கியுள்ளார். மனிதர்கள் எப்படி பலவிதமோ, அப்படியே அவர்களுடைய நோய்களும் பலவிதம். அந்த நோய்களுக்கான மருத்துவ முறைகளும் பலவிதம் என்று கூறியுள்ளார்.
பல்வேறு நோய்கள் மனிதனைத் தாக்குகின்றன. ஆனால், நோய் அறிகுறிகள் எல்லா மனிதர்களிடமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு மருத்துவ முறையும், அதன் கோட்பாடுகள் அடிப்படையில் ஒன்றுக்கொன்று மாறுபடும் என்பதையும் நூலில் சுட்டிக் காட்டுகிறார். மனித உடம்புக்குள் ஏற்படும் நோய்கள், அதைத் தீர்க்க உடல்உறுப்புகளின் செயல்பாடுகள் என்ன என்பதை, சமூகத்துடன் இணைத்து நூலில் விளக்குகிறார்.மருத்துவர்களுக்கும், மருத்துவத்தைப் பற்றிய புரிதலைக் குழப்பம் இன்றி அறிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும். புத்தகம் வேண்டுவோர் கவிக்கோ பதிப்பகத்தை 9444025000 / 044-24997373 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.