மாணவர்கள், இளைஞர்கள் தங்களின் மண் சார்ந்த அடையாளத்தை மறக்கக் கூடாது: ஆளுநர் ரவி வேண்டுகோள்

95 0

மாணவர்கள், இளைஞர்கள் தங்களின் மண் சார்ந்த அடையாளங்களை மறந்துவிடக் கூடாது என்றுஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIFT-நிப்ட்) 11-வது பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் உள்ள வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேர்ச்சி பெற்ற 263 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். மேலும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 34 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும், சான்றிதழ்களும் அளிக்கப்பட்டன.

விழாவில் ஆளுநர் பேசியதாவது: மாணவர்கள் தங்களின் கடின உழைப்புக்கான பலனையே கைகளில் பட்டங்களாகப் பெற்றுள்ளீர்கள். வாழ்க்கையே ஒரு பாடம்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் என்பது ஒரு பரிணாம வளர்ச்சியாகும். நமது மனித இனம் வளர்ச்சி அடையும் போதெல்லாம் இந்த துறையும் மாற்றம் கண்டது.

25 ஆண்டுகளுக்கு பிறகு… நம்நாடு முந்தைய காலத்தைவிட தற்போது வலிமையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பின் உலகளவில் முக்கிய இடத்தில் இந்தியா இருக்கப் போகிறது. அதற்கு உங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். இந்தியா ஒரு தற்சார்பு நாடு என்ற இலக்கை அடைய அது உந்துசக்தியாக இருக்கும்.

18-ம் நூற்றாண்டில் ஜவுளி உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் இருந்தது. ரோம் நாட்டுக்கு இந்தியாவிலிருந்ததுதான் ஆடைகள் சென்றன. ரோமின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது குறித்தஅவர்களின் ஆலோசனையில், ரோம் பெண்களின் ஆடைகளுக்காக ஒவ்வோர் ஆண்டும் 20 மில்லியன் தங்கம் செலவிடுவதைக் குறைக்க வேண்டுமென விவாதிக்கப்பட்டது. அதாவது, இந்திய உடைகள் வாங்குவதைப் புறக்கணித்தால்தான் பொருளாதாரத்தைக் காப்பாற்ற முடியும் என மற்ற நாட்டினர் எண்ணும் அளவுக்கு நமது வளர்ச்சி இருந்துள்ளது.

அதேபோல, மஸ்லின் என்றஆடையும் ஆந்திராவில் உள்ளமசூலிப்பட்டினம் என்ற இடத்திலிருந்து தோன்றியதாகும். அன்றைய காலத்தில் நாம்தான் உலகச் சந்தையில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தோம். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. அதை மீண்டும் சீர்செய்ய முயன்று வருகிறோம். உடை என்பது அனைத்து மனிதர்களுக்கும் தேவையானது. இதில் உங்களின் படைப்புத்திறனே வெற்றிக்கு வழிவகுக்கும்.

பழங்குடியினர் மூலம் அறியலாம்: படைப்பாளிகளாகிய உங்களிடம் தேடல், அந்தந்த மண் சார்ந்த அடையாளங்கள், பழமையின் வாசம் நிச்சயமாக இருக்க வேண்டும். மண் சார்ந்த அடையாளங்கள் எவ்வளவு முக்கியம் என்பதைப்பழங்குடியினர் மூலம் நாம்அறிய முடியும். ஒவ்வொரு பழங்குடியினரும் இன்றளவும் தனித்துவமான அடையாளங்களைக் கொண்டுள்ளனர்.

இளைஞர்கள் தெரியாத எதிர்காலத்தை நினைத்துப் பயப்படாமல் சவாலான முயற்சிகளில் ஈடுபடவேண்டும். மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நம்நாட்டில் பல்வேறு திறமைகள் புதைந்துள்ளன. அதை வெளிக்கொணர வேண்டியது அவசியமாகும். வாழ்வில் தோல்விகளைக் கண்டு பயப்பட வேண்டாம். தோல்வி என்பது ஒரு அனுபவம். உங்களிடம் கடின உழைப்பு இருந்தால் வெற்றியை யாரும் தடுக்க முடியாது.

நீங்கள் வளரும்போது நாடு தானாக வளரும். நீங்கள் வளர்ந்தாலே போதும். எந்த துறையில் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுங்கள். வளர்ச்சி அடையுங்கள். நாடும் தானாக வளர்ச்சி அடையும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர் பேசினார்.

இந்நிகழ்வில் நிப்ட் நிறுவன இயக்குநர் அனிதா மனோகர், முதல்வர் (கல்விப் பிரிவு) வந்தனா நாரங் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.