தமிழகத்தில் இந்த ஆண்டு சிவராத்திரி விழா 5 இடங்களில் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் இருந்து காசிக்கு செல்லும் பக்தர்களுக்கு பயணச் செலவு உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கும் வகையில், அரசின் சார்பில் ஆண்டுக்கு 200 பேரை காசிக்கு அழைத்துச் செல்ல ரூ.50 லட்சம் ஒதுக்கப்படும் என சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கும் மத்திய அரசின் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஆண்டு சிவராத்திரி திருவிழா, காளிகாம்பாள் கோயிலில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 5 இடங்களில் சிவராத்திரி திருவிழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகமான பக்தர்கள், ராமேசுவரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.160 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோயில்களில் ஆகம விதிகள் பின்பற்றப்படுவது குறித்து ஏற்கெனவே முதல்வர் தலைமையில் உயர்மட்ட செயல்திட்டக் குழு செயல்பட்டு வருகிறது. தற்போது நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவையும் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.