ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 150 ரூபாவிற்கு மீனவர்களுக்கு வழங்க முடியும் – ஐக்கிய மக்கள் சக்தி

129 0

இலங்கை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கை கடற்பரப்பின் மீன் வளங்களை இந்திய மீனவர்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். மீனவர்களுக்கு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 150 ரூபாவிற்கு வழங்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார்.

150 ரூபாவிற்கு மண்ணெண்ணெய் வழங்க முடியும் என குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.

வீட்டில் சில உற்பத்திகளை காய்ச்சுவதை போல் மண்ணெண்ணெய்யை உற்பத்தி செய்ய முடியாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  மின்சக்தி மற்றும் வலுசக்தி   அமைச்சு, நீர் வழங்கல் அமைச்சு    ஆகியவற்றிற்கான   நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார  மேலும் குறிப்பிட்டதாவது,

புதுப்பிக்கத்தக்க வளங்கள் செயற்திட்டத்தின் முதலீட்டாளர்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை.

ஆகவே செலுத்த வேண்டிய நிலுவை தொகையை முறையாக செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களில் அதானி நிறுவனத்திற்கு 500 மெகாவாட் மின்சாரத்தை வழங்குவது தொடர்பில் பலமுறை கருத்துரைத்துள்ளோம்.

மின்கட்டமைப்பின் வெளிப்படை தன்மை தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுகிறது.நிதி கொடுக்கல் தொடர்பில் தெளிவற்ற தன்மை காணப்படுகிறது.

மறுபுறம் மின்சார கட்டணம் திருத்தம் செய்யப்பட்டது,ஆனால் இதுவரை குறித்த சட்டங்கள் சான்றுரைக்கப்படவில்லை.

எரிபொருள் விலையேற்றதிற்கமைய மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தர்க்கம் தவறானது.மின்கட்டணம் தொடர்பில் தொழினுட்ப ரீதியில் நிலையான தீர்மானம் எடுப்பது அவசியமாகும்.மின்னுற்பத்தியின் முக்கியத்துவத்தின் முன்னுரிமையை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்காக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நிலக்கரி எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் முடிவடையும்,ஏப்ரல் மாதம் காலப்பகுதியில் நிலக்கரி பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.இந்த நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் உரிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மின்னுற்பத்தி செயற்திட்ட அபிவிருத்தி பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.2023 ஆம் ஆண்டுக்கான மின் பாவனைக்கான கேள்வியை முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் என்ன புதிய திட்டங்களை வகுத்துள்ளது.

மசகு எண்ணைய் கப்பல் 40 நாட்களுக்கும் அதிகமாக கடலில் நங்கூரமிட்டது. உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளது,ஆனால் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருளின் விலையை குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. எரிபொருள் கட்டமைப்பு பாதிக்கப்பட்டதால் தான் நாட்டில் கடந்த மாதங்களில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் ஏன் அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்க முடியாது.

இதன்போது எழுந்து உரையாற்றிய மின்சாரம் மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக எரிபொருள் விலை குறைப்பின் நிவாரணத்தை நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளோம்.எதிர்வரும் நாட்களில் விலை குறைவடைந்தால் அதன் பயனை  நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளோம் என்றார்.

மீண்டும்  உரையாற்றிய நளின் பண்டார விலைமனுகோரல் இல்லாத வகையில் எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது.அதன் காரணமாகவே விலை குறைவடையவில்லை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய அமைச்சர் கஞ்சன விஜேசேகர விலை மனுகோரல் இல்லாமல் எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடுவது தவறானது.மனுகோரல் மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் தான் மாற்ற திட்டங்கள் ஊடாக எரிபொருள் இறக்குமி செய்யப்படுகிறது என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய நளின் பண்டார,மசகு எண்ணெய் இறக்குமதிக்கும் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.மண்ணெண் சந்தையில் இல்லை ஒரு லீற்றரின் விலை 500 ரூபாய் வரை கறுப்ப சந்தையில் விற்கப்படுகிறது.

கடற்தொழிலாளர்களுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.இலங்கை மீனவர்களை கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கை கடற்பரப்பில் உள்ள மீன் வளங்களை இந்திய மீனவர்களும்,ஏனைய நாட்டவர்களும் பெற்றுக்கொள்கிறார்கள்.ஒரு லீற்றர் மண்ணெண்ணையை 150ரூபாவுக்கு வழங்க முடியும் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய அமைச்சர் காஞ்சன விஜேசேகர சபையை தவறாக வழிநடத்த வேண்டாம்.மண்ணெண்ணெய் ஒரு லீற்றரை 150 ருபாவிற்கு வழங்க முடியாது,ஆகவே பொய்யுரைக்க வேண்டாம் என்றார்.

இதன்போது மீண்டும் உரையாற்றிய நளின் பண்டார தற்போதைய விலைக்கமைய எரிபொருளை குறைந்த விலைக்கு வழங்க முடியும்.மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடி அதனை பழைய இரும்புக்கு விற்கும் நிலையில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படும் போது விலை குறைப்பு தொடர்பில் அவதானம் செலுத்த முடியாது என்றார்.