மின்சாரக் கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மதஸ்தானங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

130 0

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையில் மின் கட்டண அதிகரிப்பினால் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மதஸ்தானங்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய மின் கட்டண திருத்தம் காரணமாக  மதஸ்தானங்கள் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றன. அதிக வருமானங்கள் இருக்கும் பள்ளிவாசல், கோயில், விகாரை, ஆலயங்கள் இருக்கின்றன.

அவ்வாறான மதஸ்தானங்களுக்கு மின் கட்டண உயர்வை தாங்கிக்கொள்ள முடியுமாக இருக்கும். என்றாலும் பின்தங்கிய பிரதேசங்களில் இருக்கும் மதஸ்தானங்களுக்கு இது பாரிய பிரச்சினையாகி இருக்கின்றது. அதனால் இதுதொடர்பாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் நீர் கட்டண மறுசீரமைப்பை மேற்கொள்ள கடந்த காலங்களில் நாங்கள் நடவடிக்கை எடுத்தபோது அரசியல் அழுத்தங்கள் காரணமாக அது சாத்தியமற்றுபோனது. என்றாலும் தற்போது 70வீத கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இன்றாலும் கட்டணம் தொடர்பில் பொது அளவுகோள் ஒன்றை மேற்கொள்ளவேண்டும். ஏனெனில் நீர் மற்றும் மின்சார கட்டணங்களை அதிகரிக்கும்போது பாரிய எதிர்ப்புகளுக்கு முகம்காெடுக்க வேண்டி ஏற்படுகின்றது.

மேலும் கடந்த காலங்களில் 3வருடங்களுக்கு ஒரு முறை நீர் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும். ஆனால்  2009ஆண்டில் இருந்து 2019வரை அரசியல் அழுத்தங்கள் காரணங்களால் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ள முடியாமல்போனது.

இந்த தருணத்தில் நீர்வழங்கல் மற்றும் வலுசக்தி போன்றவற்றில் அரச. தனியார் பங்குடமையை அறிமுகப்படுத்தவேண்டும்.  இவ்வாறான புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் பாரிய எதிர்ப்புகள் காணப்பட்டண.

என்றாலும் தற்போது நாங்கள் இருக்கும் நிலையில் அரச, தனியார் பங்குடமையை மேற்கொண்டே ஆகவேண்டும். வேறு தெரிவு இல்லை என்றார்.