காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடுகின்ற போராட்டம்!

354 0

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பெப்ரவரி 09ஆம் நாள் கொழும்பிலுள்ள உயர்மட்ட அமைச்சர்களைச் சந்தித்தனர். இவர்கள் இந்தச் சந்திப்பில் தமது பொறுமை குறைந்து கொண்டு செல்வதாகவும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக இன்னமும் பதிலளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் வடக்கிலிருந்து ஆறு மணித்தியால பேருந்துப் பயணத்தின் மூலம் கொழும்பு சென்றடைந்த இவர்கள் போரின் போது காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை பல ஆண்டுகளாகத் தேடி வருகின்றனர். மே 2009ல் இறுதி யுத்தம் இடம்பெற்ற போதும் அதற்குப் பின்னரும் காணாமற் போன தமது மகன்கள், மகள்கள் மற்றும்  துணைவர்களுக்கு என்ன நடந்தது என்று அறிவதற்கான பல்வேறு முயற்சிகளை இத்தமிழ் மக்கள் மேற்கொண்ட போதும் இவர்கள் இதில் இன்னமும் வெற்றி கொள்ளவில்லை.

கடந்த ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்தே இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. இந்த மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன வவுனியாவிற்கு சென்று இந்த மக்களைச் சந்தித்ததுடன் கொழும்பில் உயர்மட்ட சந்திப்பொன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாகவும் அதில் கலந்து கொண்டு பிரச்சினைகளைக் கூறுமாறும்  கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளில் 15 பேர் கொழும்பு நோக்கிப் பயணமாகினார். இந்தச் சந்திப்பின் போது இந்த உறவுகள் தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியதாகவும் ஆவேசமான கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் அங்கிருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை  அந்த இடத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என சந்திப்பில் கலந்து கொண்ட உறவுகள் கோரியதாகவும் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

‘எமக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை’ என சந்திப்பில் கலந்து கொண்ட உறவுகளில் ஒருவர் அமைச்சர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

vavuniya-fasting (3)

மூன்று மணித்தியாலங்கள் வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட 15 பேரின் வழக்குகளை முன்னுரிமைப்படுத்துவதாக சிறிலங்காவின் காவற்துறை மா அதிபர் மற்றும் அமைச்சர்கள் வாக்குறுதி வழங்கியதையடுத்து இந்தச் சந்திப்பு நிறைவுபெற்றது.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ‘அரசாங்கத்துடன் தனிப்பட்ட உடன்பாட்டிற்கு’ வந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

‘காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் சிறிலங்கா அரசாங்கத்தால் கூறப்பட்ட பதில் திருப்தியளிக்கவில்லை என்பதால் இவர்கள் மீண்டும் தமது சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரலாம்’ என இந்த உறவுகள் சார்பாக நீதிமன்றில் வாதிடும் மனித உரிமைகள் சட்டவாளர் கே.எஸ்.இரட்னவேல் தெரிவித்தார்.

1995 தொடக்கம் காணாமற் போன 65,000 முறைப்பாடுகளை சிறிலங்கா அரசு பெற்றுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. காணாமற்போன உறவுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு 1990களிலிருந்து குறைந்தது ஆறு வரையான ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஆனால் இவற்றுள் எந்தவொரு ஆணைக்குழுவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பதில் அளிக்கவில்லை.

‘காணாமற்போன உறவுகள் இறுதியாக எங்கே காணப்பட்டனர் என்பது தொடர்பான விரிவான விளக்கத்தை அவர்களின் குடும்பத்தினர் கூறியுள்ள போதிலும் இன்னமும் இவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. சில வழக்குகளில் தமது உறவுகள் காணாமற்போனதற்குக் காரணமான சந்தேகநபர் யார் என்பது தொடர்பாக அவர்களின் குடும்பத்தினர் பெயர் குறிப்பிட்டும் உள்ளனர்’ என மட்டக்களப்பில் பணியாற்றும் தொண்டுப் பணியாளர் ஒருவர் அண்மையில் ‘தி இந்து’ ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான கடத்தல்களில் பங்குபற்றிய பாதுகாப்புப் படையினர் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தொடர்பாகவும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் சிறிலங்கா இராணுவத்திடம் எப்போது எங்கே சரணடைந்தார்கள் என்பது தொடர்பாகவும் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது தொடர்பாகவும் விரிவான தகவல்களைத் தெரிவித்த போதிலும் இன்னமும் இவர்களது பிரச்சினைக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்படும் ஆணைக்குழுக்களிடம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் முறைப்பாடுகளைச் செய்யும் போது இவர்களின் மனவடுக்கள் மேலும் அதிகமாகின்றது. காணாமலாக்கப்பட்ட குடும்பத்தினர் தமது உறவுகள் உயிருடன் உள்ளார்கள் எனத் தொடர்ந்தும் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் ‘இவர்கள் பெரும்பாலும் இறந்திருப்பார்கள்’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2015 ஐ.நா தீர்மானத்தைத் தொடர்ந்து, காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதாக ஜெனிவாவில் சிறிலங்கா வாக்குறுதி வழங்கியது. ‘கடந்த ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வரும் வகையில் சிறிலங்கா நாடாளுமன்றில் சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்ட போதிலும் இதுவரை இவ்வாறானதொரு அலுவலகத்தை அமைப்பதற்கான எந்தவொரு நகர்வும் முன்னெடுக்கப்படவில்லை’ என அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்காவிற்கான பிரதிநிதி ஜொலண்டா பொஸ்ரர் தெரிவித்தார்.

பொருளாதார திட்டம் ஒன்றையும் சிறிலங்கா அரசாங்கம்  தமக்கு வழங்கத் தவறியுள்ளதாகவும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். தமது உறவுகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தி அத்தாட்சிப் பத்திரம் ஒன்றைத் தமக்குத் தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதும் அது நிறைவேற்றப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபை ஆகியன அதிகமாகப் பணியாற்ற முடியும் எனவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘இந்தக் குடும்பங்களைப் பொறுத்தளவில் கொழும்பில் இடம்பெற்ற உயர் மட்டச் சந்திப்பானது தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான பிறிதொரு தளமாகக் காணப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தியவர்கள் இந்த வாய்ப்பை தமது அரசியல் எதிரிகளைத் தாக்குவதற்கே பயன்படுத்தியுள்ளனர் ‘ என யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் சமூகப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

வழிமூலம்       – The hindu
ஆங்கிலத்தில்  – Meera Srinivasan
மொழியாக்கம் – நித்தியபாரதி