200 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் – ராஜித சேனாரத்ன

140 0

மருத்துவ சேவையில் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டால் வைத்தியசாலைக்குள் போராட்டம் தோற்றம் பெறும். பொருளாதார நெருக்கடியினால் 200 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

ஆகவே மிகுதியாக இருக்கும் வைத்தியர்களையாவது தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்பு மருத்துவ சேவைத்துறையில் தாக்கம் செலுத்தியுள்ளது.வைத்தியர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெறும் வயதெல்லையை மறுபரிசீலனை செய்யுமாறு சுகாதாரத்துறை செயற்குழு கூட்டத்தின் போது பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.

குருநாகல் வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவின் விசேட வைத்தியர்களில் இருவரும்,களுத்துறை பொது வைத்தியசாலையில் இரண்டு மகப்பேற்று பிரிவு விசேட வைத்தியர்களும் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்கள்.

நாட்டில் மருந்து தட்டுப்பாடு காணப்படும் பின்னணியில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை தோற்றம் பெற்றால் வைத்தியசாலைக்குள் போராட்டம் தோற்றம் பெறும்,அது பாரதூரமான எதிர் விளைவுகளை தோற்றுவிக்கும் என்பதை அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் இருந்து சுமார் 200 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளார்கள்,ஆகவே மிகுதியாக இருப்பவர்களை பாதுகாத்துக் கொள்வதற்கு விசேட கவனம் செலுத்த வேண்டும்.

விசேட வைத்தியர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெறும் வயதெல்லை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்.பொருளாதார பாதிப்பு மருத்துவ துறையில் தீவிரமடைந்தால் முழு நாடும் மிக மோசமாக பாதிக்கப்படும் என்றார்.