அடக்குமுறையால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாது – நளின்

130 0

நாட்டு மக்கள் பொழுது போக்கிற்காக போராட்டத்தில் ஈடுபடவில்லை. பாதிக்கப்பட்டுள்ளதால் வீதிக்கு இறங்குகிறார்கள். போராட்டத்தை முடக்குவதை விடுத்து போராட்டம் தோற்றம் பெறுவதற்கான காரணத்திற்கு தீர்வு வழங்க ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும். அடக்குமுறையால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  மின்சக்தி மற்றும் வலுசக்தி   அமைச்சுஇ நீர் வழங்கல் அமைச்சு    ஆகியவற்றிற்கான   நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.போராட்டத்தின் விளைவால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியது.மஹிந்த ராஜபக்ஷ மே மாதம் 09 ஆம் திகதி முழு நாட்டுக்கும் தீ வைத்து விட்டு பதவி விலகினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மே மாதம் 12 ஆம் திகதி பிரமராக பதவி ஏற்றார்.பதவியேற்றதன் பின்னர் காலி முகத்திடல் போராட்டம் பாதுகாக்கப்படும்,அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

அவர் ஜனாதிபதியாக பதவியேற்கும் வரை போராட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டார். போராட்டத்திற்கு இவர் நிதி வழங்கினாரா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ நிபந்தனையின் அடிப்படையில் பிரதமர் பதவியை ஏற்க இணக்கம் தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை போல் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் பிரதமர் பதவியை ஏற்க முன்செல்லவில்லை.

ஊழல்வாதிகளை பாதுகாக்கும் வகையில் பிரதமர் பதவியை ஏற்கும் தேவை எதிர்க்கட்சி தலைவருக்கு இல்லை.அவர் முன்வைத்த நிபந்தனைகளை அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஏற்கவில்லை.நிபந்தனையில்லாமல் ரணில் விக்கிரமசிங்க முன்வந்தார் அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுப்படுபவர்களை இராணுவம் கொண்டு அடக்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் பொழுது போக்கிற்காக போராட்டத்தில் ஈடுப்படவில்லை. பாதிக்கப்பட்டுள்ளதால் வீதிக்கு இறங்குகிறார்கள்.

போராட்டத்தை முடக்குவதை விடுத்து போராட்டம் தோற்றம் பெறுவதற்கான காரணத்திற்கு தீர்வு வழங்க ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும்.பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒருபோதும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றார்.