முல்லைத்தீவு மாவட்ட குடி நீர் அபிவிருத்தி திட்டத்தை துரிதமாக நிறைவு செய்யுங்கள்

132 0

உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழான நீர் வழங்கல் சுகாதார மேம்பாடு திட்டத்தின் கீழான செயற்திட்டத்தை ஏனைய மாவட்டங்களுக்கு 2024 ஆம் ஆண்டுவரை நீடிக்க முடியுமாயின். கரும்புள்ளியான் குடிநீர் திட்டத்தை 2023 ஆம்  ஆண்டுடன்  எவ்வாறு இடைநிறுத்த முடியும்.

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள பெரும் போராட்டத்தை எதிர்கொள்கிறார்கள்.

ஆகவே முல்லைத்தீவு மாவட்ட குடி நீர் அபிவிருத்தி திட்டத்தை துரிதமாக நிறைவு செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, நீர் வழங்கல் அமைச்சு ஆகியவற்றிற்கான   நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பில் கருத்துரைக்க அவதானம் செலுத்துகிறேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் தற்போம் வறுமை கோட்டில் முன்னிலையில் உள்ளது.

மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்குவதை பல்வேறு காரணிகளினால் முடக்குவது முற்றிலும் மோசமானது. உலக வங்கியின் நிதி வழங்கலில் நீர் வழங்கல் சுகாதாரம்  மேம்பாட்டு திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் இலங்கையில் வறுமை நிலையில் உள்ள 7  மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் முதன்மையாக கொள்ளப்பட்டன.

இந்த திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2000 மில்லின் ருபா ஒதுக்கப்பட்டது. பின்னர் ஏனைய மாவட்டங்களுக்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

முல்லைத்தீவு திட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் உள்ள கறுப்புள்ளியான் குடிநீர் திட்டம் ஆரம்பிப்பதற்காக மனுகோரல் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டன.ஆனால் இதுவரை கறும்புள்ளியான் குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை.இதற்கு குறிப்பிடும் காரணிகள் நகைப்புக்குரியதாகும்.

செயற்திட்டத்தை முன்னெடுக்க நிதி இல்லை என்கிறார்கள்,உலக வங்கி இந்த திட்டத்தை 2023 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும், ஆகவே தற்போது திட்டத்தை தொடர முடியாது, கொவிட் தாக்கம் என்ற காரணிகளை பொறுப்பான தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். குறிப்பிடும் காரணிகள் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.இந்த காரணிகள் ஏனைய மாவட்டங்களுக்கு தாக்கம் செலுத்தவில்லை.

கறும்புள்ளியான் திட்டத்திற்கு கேள்வி கோரல் விடுக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் கம்பஹா,குரநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் உலக வங்கியின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செயற்திட்டத்தை ஆரம்பிக்க பத்திரிகைகளில் கேள்வி மனு பிரசுரிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா,குருநாகல் மாவட்டங்களின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் காலம் 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முன்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி பணியின் முடிவுறு காலம் 2023 ஆம் ஆண்டுக்கு வரையறுத்துள்ளமை எந்தவிதத்தில் நியாயமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த போது இவ்விடயம் தொடர்பில் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார், ஆகவே விடயதானத்திற்கு பொறுப்பாக அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்தின் குடிநீர் செயற்திட்டம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிழக்கு மாந்தை பிரிவு, துணுக்காய் பிரதேச மக்களில் பெரும்பாலானோர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வது பெரும் போராட்டமாக உள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வன்னிவிலான குளம், அம்பாள் குளம்,கொள்ளவலவன் குளம்,ஒற்றடுத்தன் குளம், பாலை நகர்,சிவநகர்,செல்வ நகர்,பாண்டியன்குளம், கரும்புள்ளியான் குளம்,பூசரசன் குளம், விநாயக புரம் உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த 3040இற்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்த 9000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுத்தமான குடி நீர் பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள் அதேபோல் துணுக்காய் பிரசேத செயலகத்திற்கு உட்பட்ட 12,139 பேர் சுத்தமான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்க்கொண்டுள்ளார்கள்.இந்த குடிநீர் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் முல்லைத்தீவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டம் யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியால் நிதியுதவி வழங்கப்பட்ட திட்டம் மறுக்கப்பட்டுள்ளமை நியாயமற்றது.

ஏனைய மாவட்டங்களுக்கான திட்டங்களை முன்னெடுத்து செல்ல முடியுமாயின் ஏன் முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்திட்டத்தை ஆரம்பிக்க முடியாது, ஆகவே நீதியுடன் செயற்படுங்கள்.

இந்த மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் நாட்டில் ஏனைய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை.

வட்டக்கட்சி குடிநீர் திட்டத்தில் 14 கிராம அலுவலர் பிரிவு உள்வாங்கப்பட்டன. ஆனால் இப்பிரதேச நிலத்தடி கிணறு ஆழமாக காணப்படுவதால் குடிநீர் தரமாதான இல்லை கண்டாரவளை குடிநீர் திட்டம் கடற்பகுதியை அண்மித்துள்ளதால் நீர் உவர்தன்மையில் உள்ளதால் அப்பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டங்களை துரிதப்படுத்துமாறு வினையமாக கேட்டுக் கொள்கிறோம்;.மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினையின் பாரதூரத்தன்மையை விளங்கிக் கொள்ளுங்கள்.மாகாண அபிவிருத்தி திட்டங்களில் பாரபட்சம் பார்க்க வேண்டாம் என்பதை கேட்டுக் கொள்கிறோம்.