வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/247 தையிட்டி கிழக்கு வள்ளுவர் புரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள திருவள்ளுவர் சன சமூக நிலையத்தினரால் நேற்று வியாழக்கிழமை (நவ 24) திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி வடக்கு பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பின், அப்பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்கள் முகாம்களில் வசித்துவந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் வலி வடக்கு பகுதியில் உள்ள பொது மக்களின் இடங்கள் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டு, பொதுமக்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.
அதனை தொடர்ந்து அந்த மக்கள் தமது சொந்த இடங்களை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி வலி வடக்கில் வீதி புனரமைப்பு, வீட்டுத்திட்டம், குடிநீர் வசதி, மின்சார வசதி, மேலும் சில அத்தியாவசிய சேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, அப்பகுதி மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.
எனினும், வள்ளுவர் புரம் பகுதியில் காணப்பட்ட திருவள்ளுவர் சிலை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழலால் அழிவடைந்திருந்தது.
அதன் பின்னர் அக்கிராம மக்களது முயற்சியினால் சுமார் 7 லட்சம் ரூபா செலவில் அதே இடத்தில் கருங்கல்லினால் நிறுவப்பட்ட 4 அடி உயரமான புதிய திருவள்ளுவர் சிலை இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.
இந்த சிலை திறப்பு நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலக உதவி பிரதேச செயலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர், வலி வடக்கு மீள்குடியேற்ற சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.