அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்.

350 0

மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
24.11.2022

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022

மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எமது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.

– தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்கள்-

அன்பார்ந்த தமிழீழ மக்களே!
தமிழீழத்தின் விடுதலைக்காகத் தமக்கென்று வாழாது, தம் வாழ்வையே எமக்காகத் தந்தவர்கள் எம் மாவீரர்கள். எதிர்காலச் சந்ததி நிம்மதியாகத் தமிழீழ தேசத்தில் வாழவேண்டும் என்ற ஒரே இலட்சியத்திற்காக வீரகாவியமானவர்கள். எத்தனை தடைகள், துன்பங்கள் வந்தபோதும் இறுதிமூச்சு உள்ளவரை அயராது களத்திலே நின்று போராடிய காவற்தெய்வங்களை மலர்தூவி விளக்கேற்றி உறுதிகொள்ளும் நேரம் இது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் அடைந்த வெற்றிகளும் தமிழீழ தேசத்தின் நிமிர்வும் ஆயிரமாயிரமாய் களத்திலே வீழ்ந்த மாவீரர்களின் தியாகத்தால் உருப்பெற்றவை. 1982 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களை எம் மண்ணுக்காக விதைத்திருக்கின்றோம்.

தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள், எமது போராட்டச் செயற்பாட்டு ஆவணங்கள், வரலாற்று இடங்கள், நினைவுச் சின்னங்கள் என்பனவற்றை சிறிலங்கா அரசு அழித்தொழித்தது மட்டுமல்லாது தமிழின விரோதிகளைப் பயன்படுத்தித் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மரபுரீதியான வெளிப்பாடுகளில் மாற்றம் செய்து திரிபுபடுத்தி எமது மாவீரர்களின் தனித்துவத்தை இழக்கச்செய்து தவறான வரலாற்றை பதியம் செய்யமுனைகின்றது.

களத்திலே வீழ்ந்த வீரருக்கு நடுகல் அமைத்து வழிபடும் தமிழரின் பழமையான பண்பாட்டு மரபு அழிந்தொழிந்து விடாமல் தேசியத் தலைவர் அவர்களினால், தமிழீழ தேசத்திலே பதியமிட்டு வளர்த்த தீர்க்கமான சிந்தனையால் இன்று தமிழர் வாழ்கின்ற நாடெங்கும் மாவீரரைப் போற்றி வணங்குகின்ற மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற்றுவருகிறது. இவற்றை மரபுரீதியாக அடுத்தடுத்த சந்ததியிடம் கடத்திச்செல்வது ஒவ்வொருவரது கடமையுமாகும்.

எமது தேசத்தின் விடுதலைக்காகத் தங்கள் பிள்ளைகளை உவந்தளித்த பெற்றோர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களை மதிப்பளிப்பது எமது தலையாய கடமையாகும். அந்த அற்புதமானவர்களைத் தந்த பெற்றோர்கள் என்றும் மதிப்புக்குரியவர்கள். இந்த உன்னதமானவர்களுக்கு மலர்தூவி நெய்விளக்கேற்றி வணங்கிட உங்கள் வாழிட நாடுகளில் மாவீரர் மண்டபங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

உலகம் வியந்து நின்ற தமிழீழ விடுதலைப் போராட்டம் அறவழி தவறாது இலட்சியப்பற்றுடன் மாவீரர் சிந்திய குருதியால் உறுதி பெற்றது. அவர்களின் உன்னதமான உயிர்த்தியாகங்கள் எம் மண்ணின் விடுதலையை மீட்டுத் தரும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என இவர்கள் கொண்ட இலட்சியம் மீது உறுதிகொள்வோம்.

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.