கண்ணுக்குள்ளே வைத்தோம்!
கார்த்திகை புலரும்போது
கண்விழித்துக் கதைபேசும்
எம்மினிய கண்மணிகளே!
உங்கள் திருமுகம் தேடியே
பற்றிக் கொள்கின்றன
வற்றா நதியாய்
மனமெங்கிலும் உணர்வலைகள்!
எல்லைமீது விழிகள் வைத்து
காப்பாய் அரணாய்
பெரும் சுமைகளை
வரும் சவால்களை
தாமே சுமந்து..
இனத்துயர் துடைத்திட
நிலமெங்கும் விதைந்தவரே…!
தீராத தாகமதைப்
பகிர்ந்து சுமந்தே
பாதங்கள் பணிகின்றோம்!
வியந்து நின்ற போர்க்
களங்கள் சொல்லும்..!
சொல்லுக்கு முன்னான
செயல்கள் சொல்லும்..!
விடைதரும் வேளையில்
தலைவன் விழிகள் சொல்லும்..!
களமாடும் போதினில்
சுடு கலங்கள் சொல்லும்.!
கரையேறும் போதினில்
வெற்றித் தடங்கள் சொல்லும்…!
விடைதரும் போதினில்
சக தோழர் உணர்வுகள் சொல்லும்!
இனத்தின் விடுதலையும்
சுதந்திர இருப்புமென
பதித்த கொள்கைதனை
பாரெங்கும் விதைத்தவரே…!
உறக்கமின்றி உழைத்து
குருதி பாய்ச்சி உறைந்து
துயில்கிறீர் நித்தியமாய்
தமிழர்தம் ஆழ்மனதில்
ஆணிவேரைப் பதியமிட்டு!
கடலேறிய பெருவாழ்வை
அலைகள் சொல்லும்..!
கானக வாழ்வின் சுகத்தை
மரங்கள் சொல்லும்…!
மண்மாதா மடியுறங்கும்
மாவீரரே உம்மை
உலகமே போற்றும்…!
காலங்கள் நீளும் போதிலும்
தாயகம் தடம் மாறாது.
-இரா.செம்பியன்-