மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் உள்ள தமது வர்த்தக நிலையங்கள் முன்பாக சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டி நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிக்க தயாராகிவரும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வர்த்த நிலைய உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
மாவீரர் வாரம் என்பது எமது உறவுகளை மனதிலிருத்தி அவர்களுக்கு அஞ்சலிக்கும் முகமாக எமது வர்த்தக நிலையங்கள் முன்பாக சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டி நாம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
இந்நிலையில் எமது வர்த்தக நிலையத்துக்கு வருகைதந்த புலனாய்வாளர்கள் எமது வர்த்தக நிலையத்தை புகைப்படம் எடுத்து சென்றுள்ளதோடு அருகில் உள்ள வர்த்தகர்களிடம் எமது குடும்ப விபரம் போன்ற தகவல்களை கேட்டு வினவியுள்ளனர்.
மாவீரர் நாளுக்கு அஞ்சலி செலுத்தும் எம்மை அச்சுறுத்துவதன் ஊடக ஏனைய வர்த்தகர்களையும் பீதிக்குள் வைத்திருப்பதற்கும் அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்கும் இவ்வாறான முறையில் புலனாய்வாளர்கள் செயற்படுகின்றனர்.
இருந்தபோதிலும் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது நாம் எமது உறவுகளுக்கு நவம்பர் 27 அன்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துவோம். எனவும் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.