நிந்தவூர் பொலிஸ் பிரிவுற்குட்பட்ட அட்டப்பள்ளத்தில் களஞ்சியசாலையொன்றிலிருந்து 1.5 தொன் சட்டவிரோத பசளை சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து அக்கரைப்பற்று விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியளிக்கப்பட்ட பசளையுடன் சட்டவிரோத பசளையைக் கலந்து பொதி செய்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத பசளையும் கைப்பற்றப்பட்டு களஞ்சியசாலைக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் சட்டவிரோத பசளையையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இப்பிரதேசத்தில் அதிக பசளை தேவையுள்ளதுடன், விலை அதிகரிப்பினால் விவசாயிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கிவரும் நிலையில் கொள்ளை இலாபமடையும் நோக்கில் இம்மோசடி இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.