கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி(காணொளி)

399 0

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார், இராமகிருஸ்ணமிசன் தலைவர் சுவாமி பிரபுபிரபானந்த ஜி மகராஜ் மற்றும் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிதிகள் வரவழைக்கப்பட்டு கொடிகள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

இல்ல மாணவர்கள் பங்குகொண்ட அணி நடை மரியாதை செலுத்து நிகழ்வு கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

அவபாமியா, நிவேதிதா, சாரதா என மூன்று இல்லங்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு குழுநிலை போட்டிகளும் மெய்வல்லுனர் போட்டிகளும் நடாத்தப்பட்டுவந்த நிலையில்  இறுதி நிகழ்வாக இந்த இல்ல விளையாட்டுப்போட்டி நடைபெற்றது.

இதன்போது பல்வேறு சுவட்டு போட்டிகள் நடைபெற்றதுடன் அதனைத்தொடர்ந்து பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருக்கான போட்டிகளும் நடைபெற்றன.

அத்துடன் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன.

இந்த விளையாட்டுப்போட்டியில் விசேடமாக 400மீற்றர் தூரம் கொண்ட சைக்கிள்களில் பங்குபற்றும் மரதன் ஓட்ட நிகழ்வும் இதன்போது அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

அத்துடன் பாடசாலைகளின் வரலாற்றில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்ட மாபெரும் யோகாசன கண்காட்சியும் நடைபெற்றது.

நடைபெற்ற அனைத்து போட்டிகளின் அடிப்படையில் 399புள்ளிகளை பெற்று அவபாமியா இல்லம் முதல் இடத்தைபெற்றுக்கொண்டதுடன் 390 புள்ளிகளைப்பெற்று சாரதா இல்லம் இரண்டாம் இடத்தையும் 366 புள்ளிகளைப்பெற்று நிவேதிதா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

நிகழ்வின் இறுதியில் அதிதிகளால், சாதனை படைத்த மாணவர்களும், இல்லங்களும் வெற்றிக்கேடயங்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், தமிழ், முஸ்லிம் தலைமைகள் அரசாங்கத்தோடு பேசுவதை விட்டுவிட்டு முதலில் தங்களுக்குள்ளே பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அரசாங்கத்தோடு பேசவேண்டும் எனவும் அப்போதுதான் சிறுபான்மை மக்களுக்காக ஒரு நிரந்தர தீர்வை பொற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.