தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் வரும் மே 15ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு செப்டம்பர் 16ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு, செப்டம்பர் 19ம் தேதி சென்னை மாநகராட்சிக்கான வார்டுகள் ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், பழங்குடியின மக்களுக்கு சுழற்சி முறையில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கும் எதிராக இருப்பதால், இந்த அரசாணைகளை ரத்து செய்து விட்டு, முறையாக இடஒதுக்கீடு பின்பற்ற உத்தரவிட வேண்டும். அதுவரை தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை முறைப்படி அறிவிக்கவில்லை. அவசர, அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணை மூன்றும் செல்லும். அதே சமயம், தேர்தல் ஆணையம் விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்ைல.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதை முறைப்படி தரவில்லை. எனவே, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் அறிவிப்பை ரத்து செய்கிறேன். உரிய விதிகளை பின்பற்றி முறையாக தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும்’’ என்று கடந்த அக்டோபர் 4ம் தேதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த ஜனவரி மாதம் வழக்கு 2 நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘ஏன் தேர்தல் நடவடிக்ைகயை தொடங்கவில்லை, எப்போது தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளீர்கள்?’’ என்று தேர்தல் ஆணைய வக்கீலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதன்பின், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள், தேர்தல் ஆணைய வக்கீல் பி.குமாரிடம், இந்த வழக்கிற்கு தேவையான ஆவணங்களை 20ம் தேதி தாக்கல் செய்யுங்கள்’’ என்று கண்டிப்புடன் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் பி.குமாரிடம் நீதிபதிகள், ‘‘எப்போது தேர்தலை நடத்தப் போகிறீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வக்கீல் பி.குமார், ‘‘வரும் மே15ம் தேதிக்குள் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.