பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தப்போவதில்லை – ஜனாதிபதி

214 0

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தப்போவதில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டவுடன் தேர்தலுக்கு செல்லலாம். நாட்டு மக்கள் தேர்தலையும், முழு அரசியலையும் வெறுக்கிறார்கள்.

ஆகவே மக்கள் விரும்பும் மாற்றம் தேர்தல் முறைமை ஊடாக ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி,பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தின் பதவி காலம் நிறைவு பெறும் வரை பாராளுமன்றத்தை கலைக்க போவதில்லை.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நிலையில் அரசியல் காரணிகளுக்கு கவனம் செலுத்துவது சாத்தியமற்றதாகும்.

நாட்டு மக்கள் தேர்தலையும்,முழு அரசியல் கட்டமைப்பையும் வெறுக்கிறார்கள். நாட்டு மக்கள் அரசியல் கட்டமைப்பில் முழுமையாக புதிய மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். மக்கள் விரும்பும் மாற்றத்தை பாராளுமன்றத்தின் ஊடாக உறுதிப்படுத்த தெரிவு குழுக்களை நியமிக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற தெரிவு குழு நியமனத்தை விரைவுப்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறேன். அரசியல் கட்சி கூட்டங்களில் புதிய முகங்களை காண முடியவில்லை.கட்சிக்கு சார்பானவர்கள் கூட்டங்களில் உள்ளார்கள். இளம் தலைமுறையினர் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தை கலைக்க போவதில்லை.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டவுடன், தேர்தலுக்குச் செல்லலாம்.

தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.நாட்டில் விருப்பு வாக்கு முறைமை அமுலில் இருக்கும் வரை ஊழல் மோசடி தொடரும். மக்கள் விரும்பும் ஊழலற்ற அரசியல் முறைமை தோற்றம் பெற வேண்டுமாயின் தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும்.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறேன். அனைவருடன் ஒன்றிணைந்து செயற்பட நான் தயாராக உள்ளேன் என்றார்.