சென்னை மாநகராட்சி பகுதிகளில் குப்பைமேடாகும் காலி இடங்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

318 0

சென்னை மாநகராட்சியில் 15 மண்டல அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 200 வார்டுகளில் ஏராளமான நகர் பகுதிகள் அடங்கியுள்ளன. இந்த வார்டுகள் அனைத்திலும் தனியார் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடங்கள் மற்றும் தரைபாலத்தை ஒட்டிய கால்வாய்களில் கடந்த சில ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதிகள் அனைத்தும் குப்பைகள் நிறைந்த குன்றுகளாக மாறி, அப்பகுதி மக்களை பயமுறுத்தி கொண்டிருக்கின்றன. குறிப்பாக திருவான்மியூரில் உள்ள ரங்கநாதபுரம் தரைபாலத்தை ஒட்டியுள்ள கால்வாயில் கடந்த சில ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், தற்போது அப்பகுதி குப்பை குன்றுகளாக மாறிவிட்டது. மேலும், அக்குப்பைக்கூளங்களை நாய், கோழி, பன்றி போன்றவை கிளறிவிடுவதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களிடையே பன்றிக்காய்ச்சல், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.

இதன் உச்சகட்டமாக, அந்த தரைபாலத்தை ஒட்டிய குப்பைமேடுகளில் இறந்துபோன நாய், கோழி, பன்றி உள்ளிட்டவற்றின் உடல்கள் போடப்படுகின்றன. அவை பல மாதங்களாக அகற்றப்படாமல் கிடப்பதால், அவற்றின் உடல் அழுகி, ஏராளமான விஷ நுண்ணுயிரிகள் அப்பகுதியில் பரவி வருகின்றன. இதேபோல், சென்னை எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, பெரியமேடு, ராயப்பேட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களில் உடைந்த, காலாவதியான, ஏலம் எடுக்கப்பட்ட பழைய கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மற்றும் பழைய இரும்பு பொருட்கள் குப்பையாக போட்டு வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து ஒருசில பொதுமக்கள் கூறுகையில், ‘சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் விவிஐபிக்கள் வந்து செல்லும் முக்கிய இடங்களை தவிர, பெரும்பாலான பகுதிகளில் உடனுக்குடன் குப்பைகள் அகற்றப்படுவதில்லை. அங்கு குப்பை தொட்டிகள் நிரம்பி வழிவதால், காலியாக உள்ள இடங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

மேலும், மேற்கு அண்ணாநகரில் இருந்து பாடி வழியாக செல்லும் 100 அடி சாலை மற்றும் 200 அடி வெளிவட்ட சாலையின் பெரும்பாலான காலி இடங்களில் சென்னை மாநகராட்சி மற்றும் அரசு வாகனங்களே குப்பை, கழிவுநீர், கட்டிட மற்றும் ஆயில் கழிவுகளை கொட்டிவிட்டு செல்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் மக்களிடையே டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, பன்றி காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தாலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் கேட்டபோது, ‘சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் குப்பைகளை அகற்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்நிறுவனத்தில் பல்வேறு முைறகேடுகள் நடைபெற்றதால், அதன் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து, சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் இயங்கும் பெரும்பாலான தானியங்கி குப்பை லாரிகள் பழுதான நிலையில் உள்ளது.

தற்போது ஒருசில ஒப்பந்த லாரிகளை வைத்து குப்பைகளை அகற்றி வருகிறோம். எனினும், ஒருசில பகுதிகளில் காலியாக உள்ள இடங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் பழுதான குப்பை லாரிகள், குப்பை அள்ளும் இயந்திரங்கள் போன்றவற்றை சீரமைக்க அதிக நிதி தேவைப்படுகிறது. மாநகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதுகுறித்து தமிழக அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். ‘சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் பல்வேறு வரிகள் மூலம் போதிய வருவாய் இருந்தும், அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் குப்பை லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை முறையாக பராமரிப்பதில் அலட்சியம் காட்டுவது ஏன்? மக்கள் நலனில் தமிழக அரசு தொடர்ந்து பாராமுகமாக இருப்பது ஏன்?’ என்று சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இதற்கு விடைதான் கிடைக்கவில்லை.