சசிகலாவின் பினாமி அரசை வீழ்த்தும் வரை அறப்போராட்டம் தொடரும். எங்கள் அறப்போராட்டத்துக்கு தமிழக மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து பிரிவினரும் ஆதரவு தர வேண்டும். நாட்டை காப்பாற்ற, இந்த தமிழகத்தை காப்பாற்ற இந்த ஆட்சியை தூக்கி எறிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு எவ்வளவு பின்னோக்கி சென்றது என்பது அனைவருக்கும் தெரியும். மீண்டும் ஜெயலலிதா முதல்வரான பிறகு ஒரு மாதம் தமிழகம் சிக்கி தவித்ததையும் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் உடல்நிலை பற்றி அரசு சுகாதாரத்துறை அமைச்சரோ, தலைமைச் செயலாளரோ அல்லது பிற அமைச்சர்களோ எதுவும் கூறவில்லை.
அண்ணா உடல் நிலை பற்றி காலையிலும் மாலையிலும் அறிக்கை தரப்பட்டது. எம்ஜிஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் அறிக்கை தரப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவுக்கு இதை பின்பற்றவில்லை. அவர் மறைவு செய்தியில் கூட குழப்பம் ஏற்பட்டது. கொடியை இறக்கினார்கள், பிறகு மறுப்பு தெரிவித்தார்கள். பிறகு அறிவித்தார்கள். அவர் சிகிச்சையிலும், மரணத்திலும் மர்மம் இருப்பதாக நாம் காண்கிறோம். அவர் மறைவுக்கு முன் அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை தலைவராக தேர்வு செய்துவிட்டு மறைவு செய்தியை அறிவித்து இரவு 12 மணிக்கு பதவியேற்றுக் கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அதன்பிறகு ராஜினாமா கடிதம் தந்து சசிகலா சட்டமன்ற தலைவாரக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை கவர்னரும் ஏற்றுக்கொண்டார். இரண்டு நாட்கள் கழித்து ஓபிஎஸ், ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்து விட்டு ஜெயலலிதா ஆவியுடன் பேசி முடிவெடுத்ததாக கூறினார். சசிகலா ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்றார்.
அதன் பிறகு நடந்த கூவத்தூர் கூத்துக்களை நீங்கள் அறிவீர்கள். இதுதொடர்பாக நான் ஆளுநரை சந்தித்து நிலையான ஆட்சி அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். 15 நாளில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கூறினார். ஆனால் 48 மணி நேரத்தில் சட்டசபை கூடியது. அந்த அறிவிப்பு கூட தொலைபேசி மூலம்தான் தெரிவிக்கப்பட்டது. எம்எல்ஏக்கள் பிணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டனர்.
சட்டமன்றம் கூடியதும் செம்மலை ரகசிய வாக்கெடுப்பு கேட்டதுடன், தான் தப்பித்து வந்ததாகவும் தான் தங்கியிருந்த அறை சாவியையும் காட்டினார். எனவே வாக்கெடுப்பை தள்ளி வைக்க வேண்டும், எம்எல்ஏக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள் என்றார். இந்த கோரிக்கையின் நியாயத்தை நானும் வலியுறுத்தினேன். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ஒருவாரம் எம்எல்ஏக்களை சுதந்திரமாக விட்டு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றேன்.
ஆனால் சபாநாயகர் செவிமடுக்கவில்லை. சபையை தொடர்ந்து நடத்த முடியாததால் ஒத்திவைத்தார். பின்னர் என்னை அழைத்து கிழிந்த சட்டையை காட்டினார். நான் வருத்தம் தெரிவித்தேன். இதுவே போதும் என்றார். அப்போது, நாங்கள் ஒன்று சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது நம்பிக்கை வாக்கெடுப்ைப ஒரு வாரத்துக்குப் பிறகு நடத்த வேண்டும் என்றோம். அவர்கள் மறுத்து விட்டார்கள். பிறகு மீண்டும் சபை கூடியதும், சபையை ஒத்திவைக்க முடியாது என்று கூறினார்.
எங்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற உத்தரவிட்டார். உறுப்பினர்கள் பெயரை சொல்லி வெளியேற்றுவதுதான் மரபு. ஆனால் அவர் அதை செய்யவில்லை. 2.30 மணி அளவில் தங்கள் உடைகளை மாற்றிக்கொண்டு எஸ்பி அந்தஸ்தில் உள்ளவர்கள் நுழைந்து எங்களை பலவந்தமாக தூக்கி கொண்டு வெளியே போட்டனர். அதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. எனவே நாங்கள் கவர்னரை சந்தித்து மனு தந்தோம். சட்டசபையில் ஜனநாயக படுகொலை நடந்ததை சுட்டிக்காட்டி மெரினா காந்தி சிலை அருகே அறப்போராட்டம் தொடங்கினோம். பொதுமக்களும், இளைஞர்களும் மாணவர்களும் திரண்டனர்.
எங்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் கைதானோம். அதன்பிறகு எங்கள் கட்சி எம்பிக்கள் ஆளுநரிடம் மனு தந்தனர். இப்போது நாங்கள் ஜனாதிபதியிடம் நேரம் கேட்டுள்ளோம். இன்று இரவுக்குள் நேரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். நேரம் கிடைத்ததும் அவரை சந்தித்து சம்பவங்களை விளக்குவோம். அதையடுத்து வரும் 22ம் தேதி பிரச்னையை மக்களுக்கு தெரிவிப்பதற்காக மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம். நியாயம் கிடைக்கும் வரை இந்த போரட்டம் தொடரும்.
மக்கள் பிரச்னை இது. திமுக பிரச்னை அல்ல. சசிகலாவின் பினாமி ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை. தொகுதிக்குள் எம்எல்ஏக்கள் செல்ல முடியவில்லை. மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு காரணமே சசிகலாதான் என்று மக்கள் கூறுகின்றனர். கோடிகோடியாக கொள்ளையடித்த மன்னார்குடி மாபியா கூட்டம் ஆட்சிக்கு வரக்கூடாது என்று மக்கள் விழிப்பு பெற்றுள்ளனர். எனவே எங்கள் அறப்போராட்டத்துக்கு தமிழக மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து பிரிவினரும் ஆதரவு தர வேண்டும்.
நாட்டை காப்பாற்ற, இந்த தமிழகத்தை காப்பாற்ற, இந்த ஆட்சியை தூக்கி ஏறிய நாங்கள் நடத்தும் அறப்பபோராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற நடத்தப்படும் முதற்கட்ட போராட்டம் இது. நான் திருச்சியிலும், துரைமுருகன் காஞ்சிபுரத்திலும் பங்கேற்கிறோம். இந்த போராட்டத்துக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம் வருமாறு:
எடப்பாடி பழனிச்சாமி இன்று 5 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அப்போது பத்திரிகையாளர்கள், மணல் விற்பனையை அரசு ஏற்பது குறித்து கேட்டபோது முதல்வர் பதில் கூறவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி மகன் மணல் விவகாரத்தில் பணம் மாற்றியதால் சிறையில் உள்ளதாக கூறுகிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
இது சசிகலாவின் பினாமி ஆட்சி. இதை தொடர்ந்து கொள்ளையடிக்க அனுமதிக்க கூடாது. கொள்ளையடித்த கும்பல் ஆட்சியில் இருக்கக்கூடாது. ஜெயில் தண்டனை பெற்றவர்கள் ஆட்சியில் இருக்க கூடாது. அது தான் மக்கள் கொள்கை. எப்படி ஜெயலலிதாவும், பன்னீர்செல்வமும் அறிவித்த அறிவிப்புகள் அறிவிப்பாகவே இருந்ததோ, அதுபோல தான் இந்த அறிவிப்புகளும் அறிவிப்பாகவே இருக்கும். மணல் விற்பனையை அரசு ஏற்கும் என்று எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே கூறியிருந்தோம்.
திமுக எம்எல்ஏக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக சபாநாயகர் வீடியோ வெளியிட்டுள்ளாரே?
வீடியோ எடுப்பது அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களால் சேர்க்கவும், எடிட் செய்யவும் முடியும். எனவேதான் நாங்கள் நேரடி ஒளிபரப்பு கேட்கிறோம். நேரடி ஒளிபரப்பு இருந்தால் நேரடியாக உங்களுக்கே தெரிந்திருக்கும். அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பணம் மற்றும் நகை வாங்கி கொண்டு அமைதியாக இருந்தனர். செருப்பை தூக்கி வீசினால் கூட யாரும் நகரமாட்டோம் என்ற தோரணையில்தான் அமர்ந்திருந்தனர். அப்படி இருக்கும்போது நாங்கள் வன்முறையில் ஈடுபட வேண்டிய அவசியமே இல்லை.
இந்த போராட்டத்துக்கு முக்கிய காரணம் என்ன?
தமிழ்நாடு கொள்ளை கும்பலிடம் சிக்க கூடாது.
போராட்டத்துக்கு மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்பீர்களா?
ஒத்த கருத்துக்கள் கொண்ட கட்சிகள், அமைப்புகள் இதில் பங்கேற்கலாம். சிலர் அரசியலுக்காக இதை விமர்சிக்கலாம். அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை.
அடுத்தக்கட்டமாக என்ன செய்ய இருக்கிறீர்கள்?
சட்டரீதியாக சந்திப்போம். தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம். நான்காண்டு தண்டனை பெற்ற ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு முதல்வர் பழனிச்சாமி கோப்பில் கையெழுத்து இடுகிறார். இதைவிட வேறு அவமானம் உண்டா.
சபாநாயகர் தன் சமுதாயத்தை இழிவுபடுத்துகிறார்கள் என்று கூறுகிறாரே?
இந்த பிரச்னையை அரசியலாக்க உள்நோக்கத்துடன் அவர் அப்படி கூறுகிறார். அது எடுபடாது. மக்கள் ஏற்கமாட்டார்கள்.
சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றப்போவதாக கூறுகிறார்களே?
இது நீதிமன்ற பிரச்னை அதில் நான் தலையிட முடியாது.
கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் தொடர்ந்து கவனர்னரிடம் பல புகார்கள் அளித்துள்ளீர்கள், ஆனால் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுப்பாரா?
நடவடிக்கை எடுத்துதான் சட்டசபை செயலாளரிடம் விளக்கம் கேட்டிருக்கிறார் என்று அறிக்கை தந்திருக்கிறார்கள்.
இந்த பிரச்னையில் பாஜவுக்கு பங்கு இருக்கிறதா?
ராம மோகனராவ் வீடு ரெய்டு அன்று நடந்தது. திடீரென்று அது அமைதியாகிவிட்டது. இதன் மூலம் மத்திய அரசின் பங்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது. அதை மறைப்பதற்காகத்தான் ஓ.பன்னீர்செல்வத்தை திமுக ஆதரிப்பதாக கூறுகிறார்கள்.
சபாநாயகர் இருக்கையில் திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்தார்களே?
சபையை ஒத்திவைத்த பிறகு சில சம்பவம் நடந்ததாக கூறினார்கள். தவறு தவறு தான். அதை நான் கண்டித்துள்ளேன். சபை நேரத்தில் அது நடக்கவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி வழிநடத்தாத காரணத்தால்தான் இச்சம்பவங்கள் நடந்ததாக வீரமணி கூறியிருக்கிறாரரே?
அவர் மூத்த தலைவர். அவரை விமர்சித்து அவர் மீதான மதிப்பை குறைக்க விரும்பவில்லை.
சட்டசபையில் ஓபிஎஸ்சுக்காக குரல் தந்தீர்களே?
காவேரி, சிறுவாணி பிரச்னை, ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு உள்ளிட்டவற்றிற்கு தான் குரல் தந்தோம். ஆட்சி நீடிக்க குரல் தரவில்லை.
சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பீர்களா?
சட்டரீதியாக செய்ய வேண்டியதை செய்வோம்.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவீர்களா?
நிச்சயமாக கொண்டுவருவோம். சமுதாயத்தை கூறி எங்கள் மீது அவர் பழிபோடுகிறார். எனவே அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தர உள்ளோம்.
ஓபிஎஸ்சுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
நான் யாருக்கும் ஆலோசனை கூற இயலாது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது?
வயது காரணமாக சில சங்கடம், உபாதைகள் இருக்கின்றன. அதில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறார். தொண்டையில் குழாய் பொருத்தியிருப்பதால் சரியாக ேபச இயலாது. பேச அவருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். நல்ல பலன் கிடைத்துள்ளது. விரைவில் குணம் அடைவார்.
மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு வேறு வகையில் கொண்டு வர முயற்சிப்பதாக கூறுகிறார்களே?
வேறு வகையில் கொண்டு வந்தால் அது கண்டிக்கத்தக்கது. அதை எதிர்த்து திமுக போராடும்.
நடிகர் கமலஹாசன் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?
மக்கள் எண்ணமும் அதுதான். சசிகலாவின் ஆட்சியை யாரும் ஏற்கவில்லை.
சசிகலா நடராஜனுக்கு திமுக தலைவர் கருணாநிதி தான் திருமணம் நடத்தி வைத்தார். அவர்கள் எப்போது உங்களிடம் இருந்து பிரிந்தார்கள்?
அது பெரிய ஆராய்ச்சி. ஜெயலலிதா சசிகலாவையும் அவர் உறவினர்களையும் வீட்டை விட்டு விரட்டினார். சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்து திரும்ப வந்தார். ஆனால் இந்த நிலை எப்படி மாறியது என்று உங்களுக்கு தெரியும்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சுப்பிரமணியசாமி ஆதரவு தருகிறாரே?
வழக்கு தொடர்ந்ததே அவர்தான். ஆதரவு தருவதற்கான காரணத்தை அவரிடம் தான் கேட்க வேண்டும்.
சசிகலா சபதம் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஆத்திரத்தில் இருந்ததால், அதுவும் முதல்வராக கூடிய சூழல் இருந்தபோது சிறை சென்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் எதையும் செய்வார். ஒருநாளாவது முதல்வராக இருந்திருந்தால் சிறையில் ஏ கிளாஸ் கிடைத்திருக்கும் என நினைத்திருக்கலாம்.
மத்திய அரசு கவர்னர் மூலம் செயல்படுவதாக நினைக்கிறீர்களா?
பாஜ ஊக்குவிக்கிறதா என்பது போகப்போக தெரியும்
துணை கமிஷனர் அவைக்குள் நுழைந்து தாக்கியதற்கு நடவடிக்கை இல்ைலயே?
சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது. அரியலூரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை, பூந்தமல்லியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை, எண்ணூரில் சிறுமி கொலைகளை தடுப்பது பற்றி கவலைப்படுவதில்லை, கூவத்தூரில், சட்டமன்றத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்காததால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்துள்ளார்களே?
அறிக்கை வரட்டும் பாக்கலாம்.
முதல்வர் அறிவிப்பால் அதிருப்தி குறையுமா?
ஒருபோதும் குறையாது. அந்த அறிவிப்பு அறிவிப்பாகவே இருக்கும். தமிழக அரசுக்கு தற்போது ₹5 லட்சம் கோடி கடன் இருக்கிறது. 200க்கும் மேல் விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். மாநிலம் வறட்சியாக உள்ளது. இதுபற்றி எல்லாம் கவலை இல்லை.
அதிமுக கட்சியும், சின்னமும் யாரிடம் செல்லும்?
இது உள்கட்சி விவகாரம். அதுபற்றி பேசுவது முறையல்ல. ஆட்சியைப் பற்றிதான் நான் சொல்ல முடியும்.
கருணாநிதி இன்று தீவிர செயல்பாடு இல்லாத நிலையில் உங்களுக்கு போட்டியாக யாரை கருதுகிறீர்கள்?
கருணாநிதி எனக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார். நான் யாரையும் போட்டியாக கருதவில்லை. அதிமுகதான் எங்கள் எதிரி.
சபையில் போலீசார் தாக்கியதில் உங்கள் எம்எல்ஏக்கள் பலர் காயம் அடைந்ததாக தெரிவித்தீர்கள். நீங்களும் தாக்கப்பட்டீர்கள். உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது?
வெளி காயம் இல்லை. உள்காயம் இருப்பதுபோல தெரிகிறது. கிடுக்கிப்பிடி, கத்தரிக்கோல் பிடி போட்டு தூக்கி வந்ததில் வலி இருக்கிறது. ஸ்கேன் எடுத்து பார்க்க இருக்கிறேன்.
உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்.
இந்த அரசு 4 ஆண்டு நீடிக்குமா?
நீடிக்க கூடாது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
தோற்றிருப்பார்
ரகசிய வாக்கெடுப்பு அல்லது ஒருவாரம் கழித்து வாக்கெடுப்பு நடத்தினால் முடிவு எப்படி இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?
ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றிருக்கமாட்டார்.
அரசியல் ஞானி
வைகோ வேறுவிதமாக கருத்து கூறுகிறாரே?
அவர் அரசியல் ஞானி, நீங்கள் தான் அவரிடம் போய் கேட்க வேண்டும்.
கொள்ளை கும்பல்
அதிமுகவில் டிடிவி.தினகரனின் வளர்ச்சி பற்றி என்ன கருதுகிறீர்கள்?
யாராக இருந்தாலும் கொள்ளை கும்பலிடம் ஆட்சி இருக்க கூடாது.