தமிழர் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதை சந்தேக கண்கொண்டு நோக்குவோம். ஏனெனில் அவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
குறிப்பிடுவதொன்று,செய்வது பிறிதொன்று. அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் வெறும் கண்துடைப்பாக காணப்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஏழாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளமைக்கு ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறேன்.
2010 ஆம் ஆண்டு முதல் இந்த ஆட்சேபனையை தெரிவித்துள்ளேன்.பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது பாராளுமன்றத்தின் பொது நிர்வாக அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படும்.
148 ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தின் நிதி அதிகாரம் தற்போது முழுமைப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்த எவ்வித அவதானமும் செலுத்தப்படவில்லை.
அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு ஜனாதிபதி எத்தனை அமைச்சுக்களையும் தன்வசம் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை காணப்படுகிறது.
சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது கேள்வி எழுந்துள்ளது.நாட்டின் பொருளாதாரத்தை இல்லாதொழித்து நாட்டை விட்டு சென்று மீண்டும் நாட்டுக்கு வந்த நபரை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் நேரில் சென்று தலைவணங்கி வரவேற்கிறார்.
இவ்வாறான செயற்பாடுகள் தான் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மையை மலினப்படுத்துகிறது.
காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அதிகாரம் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் ஒருசிலர் மாத்திரமே காணாமல் போயுள்ளார்கள்,ஏனையோர் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள் என பொறுப்பற்ற வகையில் கருத்துரைத்துள்ளமை வெறுக்கத்தக்கதாகும்.இவர் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டம் வெறும் கண்துடைப்பாகவே காணப்படுகிறது.அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை.
ஊழியர் இலாப நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் 2016ஆம் ஆண்டு இறுதி ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.ஊழல் மோசடி தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பொருளாதார பாதிப்பிற்கு ஊழல் மோசடி பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியம் வெளிப்படையாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஊழல் ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி முன்னேற்றகரமான எத்தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகித்த ஒருவர் ஜப்பான் முதலீட்டு விவகாரத்தில் கப்பம் கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.இதனை தொடர்ந்து அந்த அமைச்சர் அப்போது பதவி நீக்கப்பட்டார்.
தற்போதைய அரசாங்கத்தில் அந்த நபருக்கு மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் அரசியலமைப்பு சபையின் ஜனாதிபதியின் பிரதிநிதியாகவும் அந்த நபர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான செயற்பாடுகள் எவ்வாறு ஊழல் மோசடிக்கு எதிரானதாக அமையும் என்பதை ஜனாதிபதி குறிப்பிட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன வலது பக்கம் திரும்புதாக குறிப்பிட்டுக் கொண்டு இடதுப் பக்கம் திரும்புவாராம்,அவரது கொள்கையை தற்போதைய ஜனாதிபதி கொண்டுள்ளார்.குறிப்பிடுவது ஒன்று செய்வது பிறிதொன்று,வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராகவே ஜனாதிபதி செயற்படுகிறார்.
நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு கடந்த இரண்டு வருடங்களை காட்டிலும் இந்த முறை பாதுகாப்பு அமைச்சுக்கு 12 சதவீதமளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இராணுவத்தை திருப்திப்படுத்துவதற்காகவும்,அரசாங்கத்திற்கு எதிரான மாற்றுக் கொள்கை உடையவர்களை அடக்குவதற்காகவும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,ஆனால் நாட்டில் 70 சதவீதமானோர் ஒருவேளை உணவை தான் உட்கொள்கிறார்கள்,50 ஆயிரத்திற்கும் அதிகமான பிள்ளைகள் மந்தபோசனை குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக கடந்த நாட்களில் குறிப்பிட்டுள்ளதை சந்தேக கண் கொண்டு நோக்குவோம்,ஏனெனில் இவர் இதுவரை வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றார்.