கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்தாகும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

133 0

கோயில்களில் கட்டண மற்றும் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலையில் சீராய்வுக் கூட்டம்நேற்று நடந்தது. கூட்ட முடிவில்அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 30லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த ஆண்டும் இல்லாதஅளவுக்கு இந்த ஆண்டு விரிவான ஏற்பாடுகளைச் செய்வதுகுறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை 3,057 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.3,739 கோடியே 42 லட்சம் மதிப்பிலான சொத்துகளை இந்துசமய அறநிலையத் துறை மீட்டெடுத்துள்ளது. நிலுவையில் இருந்த வாடகை தொகை ரூ.254 கோடி அளவுக்கு வசூலிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் விஐபி தரிசனத்தை படிப்படியாகக் குறைக்கின்ற முயற்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

 

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.20 கட்டண தரிசனத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருமானம் வருகிறது. ஆனாலும், அந்த பணம் தேவையில்லை என்று முடிவெடுத்து, கட்டண தரிசனத்தை ரத்து செய்துள்ளோம். நாளடைவில் படிப்படியாக எங்கெல்லாம் சாத்தியக் கூறுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் விஐபி தரிசனத்தை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

திருத்தணி ஆடிக்கிருத்திகை விழாவின் போதும், திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவின்போதும், விஐபி தரிசனத்தை நிறுத்தி விட்டோம். திருச்செந்தூரில் கந்தசஷ்டிவிழாவின்போது 600 பேர் பாந்து என்ற முறையில் 10 நாட்கள் திருக்கோயில் உள்ளே தங்கும் முறையை முழுமையாக ஒழித்து உத்தரவிட்டது இந்த அரசு.பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாகக் காலூன்ற முடியாது என்றார்.