தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3.6.2021 அன்று, ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளை பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்ல திட்டத்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க, 2021-22-ம் ஆண்டிற்கான கனவு இல்ல திட்டத்திற்கு, சாகித்ய அகாடமி விருது மற்றும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு என்கிற சு.ஜகன்னாதன், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற இ.சுந்தரமூர்த்தி, சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற கு.மோகன ராசு, சாகித்ய அகாடமி விருது பெற்ற இமையம் என்கிற வெ.அண்ணாமலை ஆகிய 6 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை 3.6.2022 அன்று வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, 2022-2023-ம் ஆண்டிற்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2005-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜி.திலகவதி, 2011-ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற பொன்.கோதண்டராமன், 2011-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், 2013-ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற ப.மருதநாயகம், 2015-ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற மறைமலை இலக்குவனார், 2015-16-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது பெற்ற மருத்துவர் இரா.கலைக்கோவன், 2018-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன், 2016-ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற கா.ராஜன், 2013-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆர்.என்.ஜோ.டி.குருஸ், 2016-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய 10 தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அரசாணை16-ந்தேதியன்று வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இந்த 10 எழுத்தாளர்களுக்கும் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.