நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஓரியன் விண்கலம்- பூமியை படம் பிடித்து அனுப்பியது

186 0

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண் வெளி ஆய்வுக்கழகமான நாசா முடிவு செய்து. ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டது. ஆர்டெமிஸ்-1 என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை கடந்த ஆகஸ்டு மாதம் அனுப்ப திட்டமிடப்பட்டது.

ஆனால் தொழில் நுட்பகோளாறு மற்றும் சூறாவளி காரணமாக 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 16ம் தேதி ஓரியன் விண்கலம், ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவுக்கு ஏவப்பட்டது. பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. அப்போது சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து ஓரியன் விண்கலம் புமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இந்த நிலையில் 5 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஓரியன் விண்கலம் நிலவை அடைந்துள்ளது. அதன் சுற்றுவட்டப்பாதை அருகே விண்கலம் சென்றடைந்து இருக்கிறது.

நிலவின் சுற்றுப்பாதையில் நுழைவதற்கு போதுமான வேகத்தை ஓரியன் விண்கலம் எடுத்து வருகிறது. சுற்றுவட்டப் பாதைக்குள் வருகிற 25ம் தேதிக்குள் ஓரியன் விண்கலம் செல்லும். அதன்பிறகு ஒரு வாரம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும். அதன்பின் ஓரியன் விண்கலம் வருகிற டிசம்பர் 11ம் தேதி பூமிக்கு திரும்பும் விண்கலத்தை பசிபிக் கடலில் இறக்க நாசா திட்டமிட்டுள்ளது. நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ஓரியன் விண்கலம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும். ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே 2.30 லட்சம் மைல்கள் தொலைவில் இருந்து பூமியை ஓரியன் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பிஉள்ளது.