உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உத்தரவாதப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் இரண்டு நிகழ்வுகள் கடந்த 20 ஆம் திகதி, தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு உத்தரவாத வேலைத்திட்டம் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட தலைமையில் மாம்பே சனச மண்டபத்திலும் ஹொன்னந்தர வடக்கு ஸ்ரீ விஜயானந்தனாராம விகாரையிலும் நடைபெற்றன.
கெஸ்பேவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாம்பே கிழக்கு மற்றும் மாம்பே வடக்கு கிராம சேவைப்பிரிவுகள் இணைந்து மாம்பே சனச மண்டபத்தில் ஏற்பாடு செய்த நிகழ்வில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
“ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் குடும்ப மட்டத்தில் வலுவாக இருக்க வேண்டும்” என்ற கருத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வுகளை வழங்குவதற்காக அனைத்து கிராம சேவைப் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. அதன் கீழ், உணவு இன்றித் தவிக்கும் மக்களுக்கு இயன்றவர்களின் பங்களிப்பை வழங்கி கடந்தகால ஒத்துழைப்பை மீளக் கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுரேன் படகொட சுட்டிக்காட்டினார்.
உணவுத் தேவையிலுள்ள சமூகத்திற்கு ஆதரவு வழங்கும் சேவையாக நிறுவப்பட்டுள்ள இந்த உணவு வங்கி / உணவுப் பரிமாற்றத் திட்டத்திற்கு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள், அரச, தனியார் துறை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் வழங்கும் நன்கொடைகளால் உணவுப் பாதுகாப்பை உருவாக்க உதவ முடியும் என்று சுரேன் படகொட மேலும் தெரிவித்தார்.
குடிமகனுக்கு பொது வசதிகளை வழங்குவதும், அவற்றைப் பராமரிப்பதும் அரசாங்கத்தின் கடமை என்றும், அந்த வசதிகளைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களில் ஏதாவது ஒன்றைப் பயிரிட்டு, சமுதாயத்திற்கு வழங்குவது குடிமகனின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒருவரையொருவர் குற்றம் சாட்டாமல், எந்தக் காலநிலையிலும் பயிரிடக்கூடிய எமது நாட்டில், உணவு உற்பத்தியை ஊக்குவித்தால் உணவு நெருக்கடி ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இந்நிகழ்வை முன்னிட்டு உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் விஸ்வகலாவ பௌத்த நிலையத்தின் வண. புலிகண்டிகுளமே ரத்தினசிறி தேரர், உணவுப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் ஷானிகா ஸ்ரீயானந்த, கெஸ்பேவ பிரதேச செயலாளர் கே.பி. பேமதாச, கெஸ்பேவ உதவி பிரதேச செயலாளர் பூர்ணிமா விக்ரமரத்ன, கெஸ்பேவ பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஜி. பெரேரா மற்றும் கிராமிய பொருளாதார மேம்பாட்டுக் குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, கெஸ்பேவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவைப் பிரிவுகளில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிக்கும் நிகழ்வு, கலாநிதி சுரேன் படகொட தலைமையில் ஹொன்னந்தறை வடக்கு ஸ்ரீ விஜயானந்தனாராம விகாரையில் இடம்பெற்றது.
ஹொன்னந்தறை ஸ்ரீ விஜயானந்தனாராமவில் ஆரம்பிக்கப்பட்ட உணவுப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டு வருவதுடன், கெஸ்பேவ சாசனரக்ஷக சபையின் பதிவாளரும் விகாராதிபதியுமான வண, ஹல்விட்டிகல யசஸ்ஸி தேரர் அனுசாசன உரை நிகழ்த்தினார்.
இதனை முன்னிட்டு உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன, கெஸ்பேவ மாநகர சபை உறுப்பினர் பிரசாத் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.