ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது – சந்திரிகா

141 0

சுதந்திர கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகுந்த மனவருத்தமளிக்கிறது. இந்நிலைமைக்கு நான் செயற்படுத்தத் தவறிய விடயங்களும் காரணமாகும்.

எவ்வாறிருப்பினும் எவராலும் சுதந்திர கட்சியை அழிக்க முடியாது. சுதந்திர கட்சி இன்றும் என்னுடனேயே இருக்கிறது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

காணொளி பதிவொன்றை வெளியிட்டு அதில் இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை மிகுந்த கவலையளிக்கிறது. இதற்கு நானும் பொறுப்பு கூற வேண்டும் என்று சில சந்தர்ப்பங்களில் தோன்றுகிறது. எனது பெற்றோரதும், என்னுடையதும் அர்ப்பணிப்பினால் சுதந்திர கட்சிக்கு 23 ஆண்டுகள் ஆட்சியில் நிலைத்திருக்க முடிந்தது.

 

2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டுக்கும் சுதந்திர கட்சிக்கும் ஏற்பட்டிருந்த நிலைமையை கவனத்தில் கொண்டே 9 ஆண்டுகளின் பின்னர் நான் மீண்டும் அரசியலில் ஈடுபடத் தொடங்கினேன்.

2015 இல் தனித்தே நான் இந்த தீர்மானத்தை எடுத்தேன். இதன் போது நான் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ளதாக என்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

3 ஆண்டுகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த செயற்திட்டம் எம்மால் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்ட தனியொரு நபரால் முழுமையாக வீழ்ச்சியடை செய்யப்பட்டது.

பண்டாரநாயக்க கொள்கையை எதிர்த்தவர்கள் , எனக்கும் இடையூறு விளைவித்தனர். என்னை கொலை செய்யுமளவிற்கு சதித்திட்டம் தீட்டினர். 2015இல் கட்சி கட்டியெழுப்பப்பட்ட போதிலும் , மைத்திரிபால சிறிசேன ஏனைய தரப்பினருடன் இணைந்து அதனை சீரழித்துள்ளார்.

என்னை கட்சியிலிருந்து புறந்தள்ளினர். சிரேஷ்ட தலைவர்கள் பலரின் இரத்தத்தினால் உருவான இந்த கட்சியை எவரும் அழிக்க முடியாது. கட்சி பலமடைய இன்னும் சிறிது காலம் செல்லும். ஆனால் நிச்சயம் அது இடம்பெறும்.

அன்று நான் இவ்வுலகில் இருப்பேனா என்று தெரியாது. எவ்வாறிருப்பினும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய இளம் தலைமுறையினரை நான் உருவாக்கிச் செல்வேன். யார் எதைக் கூறினாலும் நான் சுதந்திர கட்சிலேயே உள்ளேன். சுதந்திர கட்சியும் என்னுடனேயே உள்ளது என்றார்.