வரவு – செலவுத் திட்டத்தை இலங்கையனாக வரவேற்பதுடன் மலையகத் தமிழனாக கவலையடைகிறேன்

190 0

இலங்கையனாக வரவு -செலவுத் திட்டத்தை வரவேற்பதுடன், மலையக தமிழனாக இந்த வரவு -செலவுத் திட்டம் கவலையை தருகின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை (நவ. 22) இடம்பெற்ற வரவு -செலவுத் திட்டம் மீதான ஏழாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாங்கள் எதிர்பார்த்த பொருளாதார சீர் திருத்தங்கள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் ஒரு இலங்கையன் என்றவகையில்  வரவு-செலவுத் திட்டத்தை வரவேற்கின்றோம்.

அதேநேரம் மலையக தமிழனாக இந்த  வரவு-செலவுத் திட்டம் எனக்கு வருத்தத்தை தருகின்றது. ஏனெனில் எங்களுக்கு எந்த நிவாரணமோ பாதுகாப்போ இதில் இல்லை. இதுதொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து எமது வருத்தத்தை தெரிவித்திருந்தோம்.

 

அடுத்துவரும் 6,7 மாதங்களில் பொருளாதார மறுசீரமைப்பு மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஜனாதிபதிக்கு இருக்கின்றது. ஆனால் அந்த 6,7 மாதங்களில் எமது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எமக்கு  பயம் இருக்கின்றது. எந்த பாதுகாப்பு கவசமும் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது கடினமாகும்.

ஏனெனில் கொலிட் காலத்தில் தோட்ட துரைமாருக்கு கொவிட் தடுப்பு ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தோட்ட மக்களுக்கு தடுப்பு ஏற்றவி்லலை. இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும் எமது மக்கள்  புறக்கணிக்கப்பட்டு சென்றால் நாங்கள் இலங்கையர்களா என்ற சந்தேகம் நாளைக்கு எங்களுக்கே ஏற்படு்ம்.

அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக மலையகத்தில் மற்றும் பல்வேறு இடங்களில் இருப்பவர்கள் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

என்றாலும் அங்கு செல்லும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பது தொடர்பில் நாங்கள் கேள்விப்படுகின்றோம். குறிப்பாக ஓமான் நாட்டில் எமது பெண்கள் எதிர்கொண்டுள்ள நிலைமை குறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடி இருக்கி்ன்றோம்.

அதேநேரம் இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிந்துவிட்டு செல்வதற்கான தெளிவூட்டல் மேற்கொள்ளப்படவேண்டும். ஓமான் நாட்டுக்கு சென்றிருக்கும் 77பேரில் 65பேர் பதிவு செய்யப்படாமல் சென்றிருக்கின்றனர்.

மேலும்,  மலைய மக்களுக்கு எவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வது என்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் வியாழக்கிழமை கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள இருக்கின்றோம். அந்த கலந்துரையாடலில் மலையக பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன், கிரைபோஸட் தடையால் தேயிலை தோட்டங்கள் 24 சதவீம் வரை வீழ்ச்சியடைந்துள்ளன. என்றாலும் தற்போது கிரைபோஸட் தடை நீக்கப்பட்டிருக்கி்றது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

என்றாலும் வீழ்ச்சியடைந்திருக்கும் தேயிலை தோட்டங்களை மீண்டும்  உடனடியாக சரிசெய்ய முடியாது.தோட்டங்களை பார்க்கும்போது அங்கு தோட்டத்தொழிலாளர்கள் இருக்கின்றார்களோ இல்லையோ  சிருத்தைகள் இருக்கின்றன, குப்பைகள் காடுகள் காணக்கூடியதாக இருக்கின்றது.

கோத்தாபய ராஜபக்ஷ் உரத்தை நிறுத்தியதால்தான் இந்த நிலை ஏற்படவில்லை. மாறா தோட்ட கம்பனிகள் கடந்த 10 வருடங்களாக  தோட்டங்களை முறையாக பராமறிக்க தவறியதாலே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.

மற்றும்  ஊவா மாகாணத்தில் அகரபத்தனை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக  தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம். ஒரு கிரேம் தேயிலை கூட வெளியில் செல்லாமல் நிறுத்தி இருக்கின்றோம். எனவே அகரபத்தனை  பெருந்தோட்ட நிறுவனம் இதற்கு சரியான தீர்வை வழங்காவிட்டால் இந்த போராட்டத்தை நுவரெலியா மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதனால் எமது போராட்டத்துக்கு அனைத்து தோழிற்சங்களும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.