சட்டம் மற்றும் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி , பாடசாலைக்கு சேலை இன்றி வேறு ஆடைகளை அணிந்து சென்றதோடு மாத்திரமின்றி , அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பதில் ஊடகத்துறை அமைச்சர் ஷாந்த பண்டார இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
ஆசிரியர்களின் ஆடைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.
பாடசாலை கட்டமைப்பு என்பது எமது நாட்டின் எதிர்காலமாகும். ஆசிரியர்கள் சேலை அணியும் கலாசாரத்தை சீரழிக்க வேண்டும் என்பது சில அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவையாகவுள்ளது. அவர்களது தேவைக்காக பாடசாலை கட்டமைப்பை சீரழிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.
இது தொடர்பில் அரசாங்க மட்டத்தில் கலந்துரையாடப்படும். அந்த கலந்துரையாடல்களுக்கமைய கல்வி அமைச்சரினால் , வழமைக்கு மாறான ஆடை அணிந்து , அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இது தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கருத்து வெளியிடுகையில் ,
ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் எழுந்த சர்ச்சையின் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெளிவான இறுதி தீர்மானத்தை அறிவித்துள்ளார். அதற்கமைய ஆசிரியர்களின் ஆடைகளில் எவ்வித மாற்றங்களுக்கும் அனுமதி வழங்கப்படா மாட்டாது. நாட்டின் கலாசார தனித்துவத்தன்மையை பாதுகாக்கும் வகையிலேயே அவர்களுக்கான ஆடைகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
தற்போது எமது நாட்டு கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் பல்வேறு தரப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. இவ்வாறானவர்களே பாடசாலைகளுக்கு சென்று , இலவசமாக போதைப்பொருட்களைப் விநியோகிக்கின்றனர். எதிர்கால சந்ததியினரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இதுபோன்ற செயற்பாடுகளுக்கு வெளிநாடுகளிலிருந்தும் பணம் அனுப்பப்படுகிறது.
கலாசார சீரழிவுகளை ஏற்படுத்தி , நாட்டில் அசௌகரியமான சூழலை ஏற்படுத்துவது மிக இலகுவானதாகும். எனவே இதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை முதலில் நாட்டின் கலாசாரம் தொடர்பில் கற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.