கனடாவிற்கு ஆட்களைக் கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கில்லை

143 0

கனடாவிற்கு ஆட்களை கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்த சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கிறேன் என குறிப்பிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சந்திரகாந்தனின் காணி அபகரிப்பு மோசடி தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு ஒன்றை நியமிக்குமாறும் சபைக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 22) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தின் போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாரந்தன் நேற்று (நவ. 21)நான் சபையில் இல்லாதபோது எனது பெயரை குறிப்பிட்டு ஒருசில விடயங்களை முன்வைத்துள்ளார்.

அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும். காணி அபகரிப்பு தொடர்பில் ஒரு குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன்.

 

காணி அபகரிப்பு தொடர்பில் என்னிடம் உள்ள ஆவணங்களை தருகிறேன்,இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் உள்ள ஆவணங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

கனடாவிற்கு  ஆட்களை கடத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆட்களை கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஆட்கடத்தல் தொடர்பில் சந்திரகாந்தனிடம் கேட்க வேண்டும்.

அவுஸ்ரேலயாவிற்கு ஆட்கடத்தல் தொடர்பில் ஏபிசி என்ற செய்தி நிறுவனம் கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியிட்ட செய்தியில் சந்திரகாந்தனின் சகோதரர் என குறிப்பிடப்படும் அகிலகுமார் சந்திரகாந்தன் என்பவர் ஆட்கடத்தலில் ஈடுப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி பத்திரத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் மோசடி செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழுவை நியமியுங்கள்.

மோசடி தொடர்பான சகல ஆவணங்களையும் சமர்ப்பிக்க தயார். ஆகவே இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முழுமையாக நிராகரிக்கிறேன் என்றார்.