தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

124 0

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான அவ்வை நடராஜன் வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். இந்நிலையில், தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: சிறந்த தமிழறிஞர் அவ்வை நடராசன் (87) அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன்.

அவ்வை நடராசன் அவர்கள் ‘உரைவேந்தர்’ அவ்வை துரைசாமி அவர்களின் மகனாகப் பிறந்து, தந்தையைப் போலவே தமிழிலக்கியத்தில் நாட்டம் கொண்டு கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுவித்தவர். தமிழில் இவருக்கிருந்த ஆழங்காற்பட்ட புலமையால், தமிழ் வளர்ச்சித் துறையின் செயலர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர், சென்னை பாரத் பல்கலைக்கழக வேந்தர் உள்ளிட்ட பல பொறுப்புகள் இவரைத் தேடி வந்தன. தொல்காப்பியம், சங்க இலக்கியம், கம்பராமாயணம் எனத் தமிழின் பெரும் இலக்கண, இலக்கியங்களைப் பற்றி இவர் ஆற்றிய உரைகளால் கவரப்படாத தமிழார்வலர்கள் இருக்க முடியாது.

தமது பேச்சாற்றலால் உவமைக் கவிஞர் சுரதா அவர்களாலேயே ‘பாதி அண்ணா’ எனப் பாராட்டப்பட்டவர். அவ்வை நடராசன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர்மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தவர். தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்தபோது நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புகழாரம் சூட்டியவர்.

தமது இறுதிக்காலம் வரையிலும் கலைஞரின் புகழைப் போற்றி வந்தவர். தமது தமிழ்ப் பணிகளுக்காக பத்மஸ்ரீ, கலைமாமணி முதலிய ஏராளமான விருதுகளை அவ்வை நடராசன் அவர்கள் பெற்றிருந்தார். எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணாக்கர்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ள பெருந்தகை அவ்வை நடராசன் அவர்களின் மறைவு தமிழ்த்துறையினர்க்கும், கல்விப்புலத்தார்க்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தார், தமிழறிஞர் பெருமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.