குறைந்த வருமானம் பெறுவோருக்கான நலன்புரி காப்புறுதியை உறுதிப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை

132 0

நலன்புரி திட்ட கொடுப்பனவுகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  முதல் ஏப்ரல் மாதம் வரை முழுமையாக வழங்கப்படும்.கொடுப்பனவு தொகை குறைக்கப்படமாட்டாது.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கான நலன்புரி திட்டங்களின் காப்புறுதியை உறுதிப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நான் விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் குறிப்பிட்ட விடயத்திற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

குறைந்த வருமானம் மற்றும் விசேட தேவை உடையவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவுகள் கடந்த 07 மாத காலமாக பல்வேறு கட்டங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த நிவாரண கொடுப்பனவுகளை வழங்க பல்வேறு நிதி நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கின.

பொருளாதார பாதிப்புக்கு தொடர்ந்து தம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது என இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய நிதி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதற்கமைய எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நலன்புரி கொடுப்பனவுகளை தடையின்றி வழங்க அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,விசேட தேவை உடையவர்கள்,சிரேஷட் பிரஜைகள் ஆகியோருக்கு வழங்கப்படும் 5000 ரூபாவை 2500 ரூபாவாக குறைக்கவில்லை.

5000 ரூபாவுடன் 2500 ரூபாவை சேர்த்து 7500 ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்,வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தையே குறிப்பிட்டேன்.

கொடுப்பனவுகள் இரத்து செய்யப்படாமல் முழுமையாக வழங்கினால் அது வரவேற்கத்தக்கது.வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவை விரிவுப்படுத்துங்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் ஏதேனும் தவறு காணப்படலாம் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மொழப்பெயர்ப்பில் தவறு நேர்ந்துள்ளதாக என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கிறோம்.நலன்புரி கொடுப்பனவுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு வழங்கப்படும் நிவாரண கொடுப்பனவின் காப்புறுதியை ஏதேனும் வழிமுறையில் உறுதிப்படுத்தி,நிவாரண கொடுப்பனவை முறையாக முன்னெடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியுள்ளது என்றார்.